நெல்லையில் இரவில் விபத்து: மோட்டார் சைக்கிளில் சென்ற கல்லூரி மாணவர்-நண்பர் பலி

நெல்லையில் நேற்றிரவு நடந்த விபத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் மோட்டார் சைக்கிள் சென்ற கல்லூரி மாணவரும், அவரது நண்பரும் பலியானார்கள்.

Update: 2023-09-07 04:39 GMT

நெல்லையில் நேற்றிரவு நடந்த விபத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் மோட்டார் சைக்கிள் சென்ற கல்லூரி மாணவரும், அவரது நண்பரும் பலியானார்கள்.

நண்பர்கள்

நெல்லை மேலப்பாளையம் ஆமீன்புரம் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் இப்ராஹிம். இவருடைய மகன் முகம்மது திவான் (வயது 19). ஆமீன்புரம் 3-வது தெருவைச் சேர்ந்தவர் காஜா மைதீன் மகன் அப்துல்லா (18). இவர் ஒரு பாலிடெக்னிக் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

நண்பர்களான இவர்கள் 2 பேரும் நேற்று இரவில் ஒரு மோட்டார் சைக்கிளில் மேலப்பாளையம் மாட்டுச்சந்தை அருகில் உள்ள பெட்ரோல் பங்குக்கு சென்றனர். அங்கு மோட்டார் சைக்கிளுக்கு பெட்ரோல் நிரப்பி விட்டு, அங்கிருந்து தங்களது வீடுகளுக்கு திரும்பி சென்று கொண்டிருந்தனர்.

வாகனம் மோதியது

மேலப்பாளையம் மாட்டுச்சந்தை சாலையில் காவலர் குடியிருப்பு அருகில் சென்றபோது, அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் திடீரென்று மோட்டார் சைக்கிளின் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது.

இந்த விபத்தில் சாலையில் தூக்க வீசப்பட்டதில் பலத்த காயமடைந்த முகம்மது திவான் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். படுகாயமடைந்த அப்துல்லா உயிருக்கு போராடியவாறு கிடந்தார்.

போலீசார் விசாரணை

அந்த வழியாக சென்றவர்கள் இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து, மேலப்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் விரைந்து சென்று, படுகாயமடைந்த அப்துல்லாவை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அங்கு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

இறந்த 2 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்து ஏற்படுத்திய வாகன டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர். நெல்லை மேலப்பாளையத்தில் வாகனம் மோதி 2 நண்பர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்