1,123 பயனாளிகளுக்கு ரூ.1.63 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்; கனிமொழி எம்.பி. வழங்கினார்

தூத்துக்குடியில் நேற்று 1,123 பயனாளிகளுக்கு ரூ.1.63 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் மற்றும் பணி நியமன ஆணைகளை கனிமொழி எம்.பி. வழங்கினார்.

Update: 2023-04-01 18:45 GMT

தூத்துக்குடியில் நேற்று 1,123 பயனாளிகளுக்கு ரூ.1.63 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் மற்றும் பணி நியமன ஆணைகளை கனிமொழி எம்.பி. வழங்கினார்.

நலத்திட்ட உதவி

தூத்துக்குடி மாவட்ட கலெக்டா் அலுவலக வளாகத்தில் நேற்று நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. விழாவுக்கு மாவட்ட கலெக்டர் செந்தில் ராஜ் தலைமை தாங்கினார். மாநகராட்சி மேயர் என்.பி.ஜெகன், மாநகராட்சி ஆணையர் தினேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக கனிமொழி எம்.பி. கலந்துகொண்டு 1,123 பயனாளிகளுக்கு 1 கோடியே 63 லட்சத்து 49 ஆயிரத்து 426 ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் மற்றும் பணி நியமன ஆணைகளை பயனாளிகளுக்கு வழங்கினார்.

பின்னர் அவர் பேசியதாவது:-

மாற்றுத்திறனாளிகளுக்காக தனியாக ஒரு துறையை உருவாக்கி அதனை தனது நேரடி பார்வையில் வைத்து அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றி செயல்படுத்தியவர் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி. அதனை தற்போது அப்படியே தொடர்ந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார். மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா வரும் மே மாதங்களுக்குள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது.

உருவாக்கி காட்ட வேண்டும்

சாதி பாகுபாட்டை ஒழிக்க வேண்டும் என்பதே திராவிட இயக்கத்தின் அடிப்படை நோக்கமாகும். சாதி என்பதே ஒரு கற்பனைதான். அத்தனைபேரும் சமம் என்ற சமூகத்தை உருவாக்கி காட்ட வேண்டும் என்பதுதான் தமிழக அரசின் நோக்கம் ஆகும். 300 ஆண்டுகளுக்கு முன்னர் நாம் எந்த சாதி என்றும், எங்கிருந்து வந்தோம்? என்றும் யாரும் சொல்ல முடியாது. எனவே சாதி என்பது ஒரு கற்பனையான ஒன்றுதான்.

மேலும் சாதி வேறுபாடுகளற்ற மயானங்கள் உள்ள கிராமங்களின் பஞ்சாயத்து தலைவர்களுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களின் சேவையை பாராட்டி அந்த கிராமங்களின் வளர்ச்சிக்காக, ரூ.10 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. இதன் முக்கிய நோக்கம் மனிதர்களை மனிதர்களாக பார்க்கக்கூடிய சமூகத்தை நாம் உருவாக்கி காட்டவேண்டும் என்பதுதான்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பிரம்மசக்தி, கூடுதல் கலெக்டர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ், உதவி கலெக்டர் கவுரவ்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ரெஜினி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சிவங்கரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்