தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவி
தென்காசியில் தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது.
தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று தூய்மை பணியாளர்களுக்கான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. தேசிய தூய்மை பணியாளர்களுக்கான ஆணைய தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். தென்காசி மாவட்ட கலெக்டர் துரை. ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாம்சன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மைக்கேல் அந்தோணி பெர்னான்டோ, தென்காசி உதவி கலெக்டர் லாவண்யா, மண்டல நகராட்சி நிர்வாக இயக்குனர் விஜயலெட்சுமி, பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் (பொறுப்பு) திருச்செல்வன், ஆதிதிராவிட நலத்துறை அலுவலர் நடராஜன், தாட்கோ மேலாளர் ரமேஷ், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இளவரசி, உதவி அலுவலர் ராமசுப்பிரமணியன், நகராட்சி ஆணையாளர்கள், பேரூராட்சி நிர்வாக அதிகாரிகள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் தென்காசி மாவட்டத்தில் நகராட்சி, ஊராட்சி, பேரூராட்சிகளில் பணி புரியும் தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் தூய்மை பணியாளர்களின் பணி சூழல் குறித்து ஆலோசனை நடைபெற்றது. மேலும் அவர்களுக்கு வழங்கப்படும் சம்பளம், சம்பள நிலுவை, பாதுகாப்பு உபகரணங்கள் ஆகியன குறித்து ஆய்வு செய்யப்பட்டது. மேலும் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவையில் உள்ள சம்பளம் மற்றும் பாதுகாப்பு உபகரணங்களை உடனடியாக வழங்குவதற்கு சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஆணைய தலைவர் வெங்கடேசன் அறிவுறுத்தினார்.
கூட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் 15 பயனாளிகளுக்கு ரூ.1 லட்சத்து ஆயிரத்து 750 மதிப்பிலான இலவச தையல் எந்திரங்களையும், தாட்கோ மூலம் 44 தூய்மை பணியாளர்களுக்கு தூய்மை பணியாளர் உறுப்பினர் அட்டைகளையும் ஆணைய தலைவர் வழங்கினார்.