பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவி; கலெக்டர் வழங்கினார்

தென்காசி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் துரை. ரவிச்சந்திரன் வழங்கினார்.

Update: 2023-09-04 18:45 GMT

தென்காசி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் துரை. ரவிச்சந்திரன் வழங்கினார்.

குறை தீர்க்கும் கூட்டம்

தென்காசி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் துரை. ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் பத்மாவதி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் ஷேக், கலால் உதவி ஆணையர் ராஜ மனோகரன், தமிழ் வளர்ச்சித் துறை கண்காணிப்பாளர் ஷீலா ஜெப ரூபா, பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் சங்கரநாராயணன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜெயப்பிரகாஷ், ஆதிதிராவிட நல அலுவலர் முருகானந்தம், முன்னாள் படைவீரர் நல அலுவலர் சாகுல் ஹமீது, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இளவரசி, உதவி அலுவலர் ராமசுப்பிரமணியன் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் இலவச வீட்டு மனை பட்டா, முதியோர் உதவித்தொகை, அடிப்படை வசதிகள், பட்டா மாறுதல், மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை மற்றும் இதர மனுக்கள் என மொத்தம் 347 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டன. அந்த மனுக்கள் மீது பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.

நலத்திட்ட உதவி

கூட்டத்தில் தென்காசி மாவட்டத்தில் 2 மாணவிகளுக்கு திருக்குறள் முற்றோதுதலுக்கான ரூ.15,000 பரிசுத்தொகை, பாராட்டு சான்று, மாநில அளவில் சென்னையில் நடைபெற்ற தமிழ்நாடு விழா பேச்சுப்போட்டியில் முதல் பரிசு பெற்ற மாணவிக்கு ரூ.50,000 பரிசுத்தொகை, அகவை முதிர்ந்த 2 தமிழறிஞர்களுக்கு இலவச பயண பேருந்து அட்டைக்கான அரசு ஆணை ஆகியவற்றை கலெக்டர் வழங்கினார். மேலும் முன்னாள் படை வீரர் நலத்துறையின் மூலம் படைவீரர் கொடிநாள் மிகை வசூல் புரிந்த இரண்டு மாவட்ட அலுவலருக்கு 30 கிராம் வெள்ளி பதக்கம் ரூ.3 லட்சத்து 96 ஆயிரத்து 200 மதிப்பிலும் நிதி உதவியாக வீட்டு கடன் மானியம் ரூ.ஒரு லட்சத்துக்கான காசோலையையும் கலெக்டர் வழங்கினார்.

ஆதிதிராவிடர் நலத்துறையின் மூலம் 7 பயனாளிகளுக்கு புதிரை வண்ணார் நல வாரிய அடையாள அட்டைகளையும், மாற்றுத்திறனாளிகள் துறை சார்பில் உதவி உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் காதொலி கருவிகள் தலா ரூ.8,500 வீதம் 17,000 மதிப்பிலான காதொலி கருவிகளையும் கலெக்டர் வழங்கினார்.

Tags:    

மேலும் செய்திகள்