சிறப்பு மனுநீதி நாள் முகாமில் 87 பேருக்கு நலத்திட்ட உதவி
சிறப்பு மனுநீதி நாள் முகாமில் 87 பேருக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.;
குடியாத்தம் தாலுகா சேங்குன்றம் கிராமத்தில் சிறப்பு மனு நீதிநாள் முகாம் நடைபெற்றது. முகாமிற்கு தாசில்தார்கள் நெடுமாறன், கலைவாணி, வட்டார வளர்ச்சி அலுவலர் கார்த்திகேயன், ஒன்றிய குழு உறுப்பினர் கவுரப்பன், ஊராட்சி மன்ற தலைவர் குமரன், துணைத் தலைவர் ஹேமலதாதியாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தாசில்தார் லலிதா வரவேற்றார். குடியாத்தம் உதவி கலெக்டர் தனஞ்செயன், குடியாத்தம் ஒன்றியக் குழு தலைவர் என்.இ.சத்யானந்தம், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் புண்ணியகோட்டி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினனர்.
வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமை தாங்கி 87 பயனாளிகளுக்கு வீட்டு மனை பட்டா, நில பட்டா, வாரிசு சான்று, சலவைப் பெட்டி, தையல் எந்திரம், விதவை உதவித்தொகை, கணவனால் கைவிடப்பட்டவர் சான்று, சொட்டு நீர் பாசன கருவிகள், வேளாண் கருவிகள், விதைகள், மாற்றுத்திறனாளிகளுக்கான மூன்று சக்கர சைக்கிள் என ரூ.16 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
வேளாண்மை இணை இயக்குனர் (பொறுப்பு) ஸ்டீபன் ஜெயக்குமார், உதவி இயக்குனர் உமாசங்கர், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட மாவட்ட அலுவலர் கோமதி, மேற்கு ஒன்றிய தி.மு.க. பொறுப்பாளர் முரளிதரன், வட்டார மருத்துவ அலுவலர் விமல் குமார், துணை தாசில்தார் சந்தர், வட்ட வழங்கல் அலுவலர் தேவி உள்பட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். முடிவில் கிராம நிர்வாக அலுவலர் காந்தி நன்றி கூறினார்.