807 பேருக்கு நலத்திட்ட உதவிகள்

குமராட்சி அருகே நடந்த மனுநீதிநாள் முகாமில் 807 பேருக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வழங்கினார்.;

Update: 2022-11-24 18:45 GMT

காட்டுமன்னார்கோவில், 

குமராட்சி அருகே தெற்குவிருதாங்கன் கிராமத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் மனு நீதி நாள் முகாம் நடந்தது. முகாமிற்கு கலெக்டர் பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கினார். சிதம்பரம் சப்-கலெக்டர் ஸ்வேதா சுமன் முன்னிலை வகித்தார். ஊராட்சி மன்ற தலைவர் ஆனந்தி தர்மதுரை வரவேற்றார். இதில் சிறப்பு அழைப்பாளராக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம். ஆர்.கே. பன்னீர்செல்வம் கலந்து கொண்டு 807 பேருக்கு ரூ.4 கோடியே 44 லட்சத்து 83 ஆயிரத்து 848 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:-தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒவ்வொரு மாதமும் மாவட்ட கலெக்டர் தலைமையில் 5 மனுநீதி நாள் முகாம்களை நடத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். இதனால் மக்களை நாடி மாவட்ட நிர்வாகம் மற்றும் அனைத்து துறை அதிகாரிகளும் வருகின்றனர். ஆகவே இதை பொதுமக்கள் நன்றாக பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

விடிவுகாலம்

தி.மு.க.ஆட்சியில் தான் பழங்குடியின மக்களுக்கு விடிவுகாலம் பிறந்துள்ளது. தற்போது இந்த மனுநீதி நாள் முகாமில் சுமார் 300 பழங்குடி இன மக்களுக்கு இலவச மனை பட்டா வழங்கப்பட்டுள்ளது. தற்போது தான் விவசாயம் மிக சிறப்பாக நடைபெற்று வருகிறது. அரசின் திட்டங்களை உயர் அதிகாரிகள் தனக்கு கீழே உள்ள அதிகாரிகளிடம் சொல்லி விரைவாக செயல்படுத்தினால் இன்னும் நன்றாக இருக்கும்.

விவசாயிகளை அன்றாடம் அதிகாரிகள் சந்திப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார். இதில் முன்னாள் எம்.எல்.ஏ.துரை.கி.சரவணன், வேளாண்மை இணை இயக்குனர் (பொறுப்பு) ரவிச்சந்திரன், மாவட்ட கவுன்சிலர் மனோரஞ்சிதம், ஒன்றியக்குழு தலைவர் கனிமொழி தேவதாஸ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராமச்சந்திரன், சீனிவாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் சிதம்பரம் தாசில்தார் ஹரிதாஸ் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்