குறைதீர்க்கும் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள்

தென்காசியில் குறைதீர்க்கும் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

Update: 2023-08-28 19:00 GMT

தென்காசி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் துரை ரவிச்சந்திரன் தலைமையில் நேற்று நடைபெற்றது. வருவாய் அலுவலர் பத்மாவதி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொறுப்பு) ராஜ மனோகரன், பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் சங்கர நாராயணன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜெயபிரகாஷ், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் முருகானந்தம் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் உதவி உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் 10 பேருக்கு காதொலி கருவிகள் தலா ரூ.8,500 வீதம் மொத்தம் ரூ.85 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் துரை ரவிச்சந்திரன் வழங்கினார்.

கடையம் அருகே பாப்பாங்குளம் பஞ்சாயத்து மயிலப்பபுரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சுப்பையா என்பவர் தனது கழுத்தில் நீதி வேண்டும் என்ற வாசகம் எழுதிய அட்டையை அணிந்து வந்து மனு கொடுத்தார். அதில், எனது நிலத்தை ஆய்வு செய்யாமல் நன்செய் நிலத்தை கிராம நத்தம் என குறிப்பிட்டுள்ள அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்து இருந்தார்.

வாசுதேவநல்லூர் ஒன்றியம் தேவிபட்டணம் பஞ்சாயத்து தலைவர் ராமராஜ் கொடுத்துள்ள மனுவில், என்னை பணி செய்யவிடாமல் சாதிய தீண்டாமையை திணித்தும், மக்களை கெட்ட நோக்கத்தோடு ஒன்று திரட்டி சாதிய மோதலில் தூண்டி வரும் நபர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்