மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
திருவாரூரில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் சாருஸ்ரீ வழங்கினார்.;
திருவாரூரில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் சாருஸ்ரீ வழங்கினார்.
குறைதீர்க்கும் கூட்டம்
திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் திங்கட்கிழமைதோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது.
கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ தலைமை தாங்கினார். அப்போது பொதுமக்கள் பட்டாமாறுதல், புதிய குடும்ப அட்டை, கல்விக்கடன், வீட்டுமனைப்பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்த 198 மனுக்களை கலெக்டரிடம் அளித்தனர்.
பொதுமக்களிடம் விசாரித்து மனுக்களை பெற்று கொண்ட கலெக்டர் சம்பந்தப்பட்டதுறை அலுவலர்களிடம் அதை வழங்கி குறித்தகாலத்திற்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
நலத்திட்ட உதவிகள்
அதனை தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் முதல்-அமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மூலம் 2 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.99,300 மதிப்பிலான செயற்கை கால் மற்றும் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் திருக்குறள் முற்றோதல் செய்த 2 மாணவிகளுக்கு பரிசு தொகைக்கான காசோலையுடன் பாராட்டு சான்றிதழை வழங்கினார்.
மேலும் 6 பேருக்கு தமிழறிஞர்களுக்கான உதவித்தொகை பெறுவதற்கான ஆணை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.இதில் மாவட்ட வருவாய் அலுவலர் சண்முகநாதன், தனிதுணை கலெக்டர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) லதா, உதவி இயக்குனர் (தமிழ் வளர்ச்சித்துறை) கனகலெட்சுமி, மாவட்ட வழங்கல் அலுவலர் கயல்விழி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் புவனா ஆகியோர் உடனிருந்தனர்.