கிருஷ்ணகிரியில் சுதந்திர தின விழா:கலெக்டர் சரயு தேசிய கொடியேற்றினார்23 பயனாளிகளுக்கு ரூ.1.38 கோடி நலத்திட்ட உதவிகள்

Update:2023-08-16 01:15 IST

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் நடந்த சுதந்திர தினவிழாவில் கலெக்டர் சரயு தேசிய கொடியேற்றி 23 பயனாளிகளுக்கு ரூ.1.38 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள், கடனுதவிகளை வழங்கினார்.

சுதந்திர தின விழா

கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில் மாவட்ட நிர்வாகம் சார்பில் சுதந்திர தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. மாவட்ட கலெக்டர் சரயு தலைமை தாங்கி தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர் முன்னிலை வகித்தார். தொடர்ந்து போலீசாரின் அணிவகுப்பு நிகழ்ச்சி நடந்தது.

இதில் காவல் துறை, ஊர் காவல் படை, நாட்டு நலப்பணி திட்டம், தேசிய மாணவர் படையினரின் அணிவகுப்பு மரியாதையை கலெக்டர் ஏற்றுக் கொண்டார். பின்னர் சமாதான புறாக்களையும், மூவர்ண பலூன்களையும் கலெக்டர் பறக்க விட்டார்.

நல உதவிகள்

தொடர்ந்து முன்னாள் படைவீரர் நலம், வேளாண்மைத்துறை, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை, மாவட்ட தொழில் மையம் சார்பில் 16 பயனாளிகளுக்கு ரூ.27 லட்சத்து 99 ஆயிரத்து 38 மதிப்பில் நலத்திட்ட உதவிகளும், 7 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.1 கோடியே 10 லட்சம் மதிப்பில் கடனுதவிகளும் என மொத்தம் ரூ.1 கோடியே 37 லட்சத்து 99 ஆயிரத்து 38 மதிப்பிலான நலத்திட்ட உதவி மற்றும் கடனுதவிகளை கலெக்டர் சரயு வழங்கினார்.

தொடர்ந்து பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய அரசு அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் காவல் துறை, வருவாய்த்துறை, தீயணைப்பு மீட்பு துறை, ஊரக வளர்ச்சித்துறை, கருவூல துறை, வனத்துறை உள்பட பல்வேறு துறைகளை சேர்ந்த 305 பேருக்கு பாராட்டு சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார்.

கலை நிகழ்ச்சிகள்

பின்னர் மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. இதில் கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, புனித அன்னாள் அன்னாள் மகளிர் மேல்நிலைப்பள்ளி, பாரத் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, டி.கே.சாமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, டிரினிட்டி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, டான் பாஸ்கோ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கேம்பிரிட்ஜ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆகிய 5 பள்ளிகளை சேர்ந்த 970 மாணவ, மாணவிகளின் கண் கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்த நிகழ்ச்சியில், செல்லகுமார் எம்.பி., மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி, கூடுதல் கலெக்டர் வந்தனா கார்க், கிருஷ்ணகிரி ஒன்றிய குழு தலைவர் அம்சா ராஜன், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, உதவி கலெக்டர் பாபு, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் விவேகானந்தன், சங்கு, துணை போலீஸ் சூப்பிரண்டு தமிழரசி உள்பட அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்