தேசிய கைத்தறி தினத்தையொட்டி60 நெசவாளர்களுக்கு ரூ.94.18 லட்சம் நலத்திட்ட உதவிகள்கலெக்டர் கார்மேகம் வழங்கினார்

Update: 2023-08-07 21:01 GMT

சேலம்

தேசிய கைத்தறி தினத்தையொட்டி 60 நெசவாளர்களுக்கு ரூ.94.18லட்சம் நலத்திட்ட உதவிகளை கலெக்டர்கார்மேகம் வழங்கினார்.

கைத்தறி கண்காட்சி

9-வது தேசிய கைத்தறி தினத்தையொட்டி நேற்று சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சிறப்பு கைத்தறி கண்காட்சி நடந்தது. மாவட்ட கலெக்டர் கார்மேகம் தலைமை தாங்கி கைத்தறி கண்காட்சியை தொடங்கி வைத்தார். மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்ததால் ஏராளமான பொதுமக்கள் வந்திருந்தனர். பின்னர் அவர்கள் கைத்தறி கண்காட்சியை பார்வையிட்டு தங்களுக்கு தேவையான துணிகளை வாங்கி சென்றனர். நிகழ்ச்சியில், கலெக்டர் கார்மேகம் பேசியதாவது:-

பருத்தி ரகங்கள்

கைத்தறி தொழிலின் முக்கியத்துவம் மற்றும் நாட்டின் சமூக பொருளாதார வளர்ச்சிக்கு கைத்தறியின் பங்களிப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தவும், கைத்தறி தொழிலை மேம்படுத்தி, கைத்தறி நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும், நெசவாளர்களின் பெருமையை உயர்த்தவும் நாடு முழுவதும் ஆகஸ்டு 7-ந் தேதி தேசிய கைத்தறி தினமாக கொண்டாடப்பட்டு வருகின்றது.

அதன்படி, 9-வது தேசிய கைத்தறி தினத்தையொட்டி சேலம் சரகத்தில் உள்ள நெசவாளர் கூட்டுறவு சங்கங்களால் உற்பத்தி செய்யப்படும் கைத்தறி துணி ரகங்களின் சிறப்பு கண்காட்சி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இக்கண்காட்சியில் சேலம் சரகத்தில் பிரசித்தி பெற்ற வெண்பட்டு ரகங்கள் மற்றும் பருத்தி ரகங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் மற்றும் அனைத்து துறை அலுவலர்களும் கைத்தறி ரகங்களை அதிகளவில் கொள்முதல் செய்து, நெசவாளர்களின் வாழ்வாதாரம் உயர்ந்திட உறுதுணையாக இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

நலத்திட்ட உதவிகள்

முடிவில், கைத்தறித்துறையின் சார்பில் நெசவாளர் முத்ரா கடன் திட்டத்தின் கீழ் 10 நெசவாளர்களுக்கு ரூ.7.45 லட்சம் கடன் ஒப்பளிப்பு ஆணைகளும், நெசவாளர் சேமிப்பு மற்றும் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 12 நெசவாளர்களுக்கு ரூ.14.73 லட்சம் மதிப்பிலான திட்ட தொகைகளும், நெசவாளர் குடும்ப ஓய்வூதிய திட்டத்தின் கீழ் 4 நெசவாளர்களுக்கு ஒப்பளிப்பு ஆணைகளும், நகர்ப்புற வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 18 நெசவாளர்களுக்கு ரூ.72 லட்சம் மதிப்பிலான பணி ஆணைகளையும் கலெக்டர் கார்மேகம் வழங்கினார்.

மேலும், நெசவாளர் கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கான புதிய மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் 10 நெசவாளர்களுக்கு காப்பீட்டு அட்டைகளும் மற்றும் 2022-23-ம் ஆண்டிற்கு தமிழ்நாடு அரசின் விருது பெற்ற 6 கைத்தறி நெசவாளர்களை கவுரவிக்கும் வகையிலும் என மொத்தம் 60 நெசவாளர்களுக்கு ரூ.94.18 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியில், மாநகராட்சி துணை மேயர் சாரதாதேவி, சேலம் சரக கைத்தறித்துறை துணை இயக்குனர் மாதேஸ்வரன், சேலம் நெசவாளர் சேவை மைய துணை இயக்குனர் கார்த்திகேயன், கோ-ஆப்டெக்ஸ் விற்பனை மேலாளர் சரவணன் உட்பட அரசு துறை அலுவலர்கள், கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க மேலாளர்கள், நெசவாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்