அரூர்:
அரூரை அடுத்த கோபிநாதம்பட்டி கூட்ரோடு புளுதியூரில் ஒவ்வொரு வாரமும் புதன்கிழமைகளில் வாரச்சந்தை நடந்து வருகிறது. இந்த வாரச்சந்தைக்கு தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், திருவண்ணாமலை மற்றும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவாயிகள், கால்நடை வளர்ப்போர் வெள்ளாடு, செம்மறி ஆடு, கறவை மாடுகள், எருமை மாடு, இறைச்சி மாடு மற்றும் நாட்டுக்கோழி ஆகியவற்றை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். வெளிமாநில மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள், பொதுமக்கள் அவற்றை வாங்க வருகின்றனர். நேற்று நடந்த சந்தையில் ஒரு மாடு ரூ.8 ஆயிரத்து 700 முதல் ரூ.50 ஆயிரத்து 900 வரையும், ஆடு எடைக்கு ஏற்றவாறு ரூ.6 ஆயிரத்து 400 முதல் ரூ.15 ஆயிரத்து 300 வரையும், நாட்டுக்கோழி ரூ.300 முதல் ரூ.1,350 வரையும் விற்பனையானது. மொத்தம் ரூ.35 லட்சத்துக்கு கால்நடைகள் விற்பனை செய்யப்பட்டன.