வன்னியர்களுக்கான 'இடஒதுக்கீட்டை விரைவில் வென்றெடுப்போம்'- ராமதாஸ் நம்பிக்கை
வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டை விரைவில் வென்றெடுப்போம் என்று டாக்டர் ராமதாஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சென்னை,
பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று வெளியிட்ட கடித வடிவிலான அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் மிக, மிக பின் தங்கிய நிலையில் உள்ள வன்னியர் சமூகத்தை கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் முன்னேற்ற வேண்டும் என்ற உன்னத நோக்கத்துடன் தொடங்கப்பட்ட வன்னியர் சங்கம் 42 ஆண்டுகளை நிறைவு செய்து 43-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. சமூகநீதிக்காக என்னுடன் பயணிக்கும் உங்கள் அனைவருக்கும் இந்த நாளில் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
வன்னியர்களுக்கு மட்டும் வழங்கப்பட வேண்டிய 20 சதவீத இட ஒதுக்கீடு 108 சாதிகளுக்கு இணைத்து வழங்கப்பட்டதால் நமக்கு கிடைக்கன் வேண்டிய உரிமைகள் கிடைக்கவில்லை. அதை சுட்டிக்காட்டியதன் பயனாக எடப்பாடி பழனிசாமி தலைமையிலான முந்தைய அ.தி.மு.க. ஆட்சியில் வன்னியர்களுக்கு 10.50 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டம் நிறைவேற்றப்பட்டது.
சில சதிகாரர்கள் தொடர்ந்த வழக்குகளால் உயர்நீதிமன்றத்தில் அது முடக்கப்பட்டாலும் கூட, இட ஒதுக்கீட்டு சட்டத்தில் உள்ள சில குறைகளை சரி செய்து புதிய சட்டம் இயற்றலாம். இட ஒதுக்கீடு வழங்கலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதனடிப்படையில் போதிய புள்ளிவிவரங்களுடன் 10.50 சதவீத இட ஒதுக்கீடு சட்டத்தை மீண்டும் நிறைவேற்ற இன்றைய தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒப்புக்கொண்டிருக்கிறார்.
இது தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியதுடன், தொலைபேசியிலும் பேசினேன். நமக்கான இட ஒதுக்கீட்டை விரைவில் வென்றெடுப்போம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.