மொட்டை மாடிகளில் நீரும், உணவும் வைப்போம்-பறவைகளின் பசி, தாகம் தீர்ப்போம்

காலநிலை மாற்றத்தால் ஆண்டுதோறும் கோடையின் உக்கிரம் அதிகரித்துக் கொண்டேதான் போகிறது. இந்த ஆண்டும் வெயில் சுட்டெரிக்கத் தொடங்கிவிட்டது.

Update: 2023-03-05 19:03 GMT

சின்னஞ்சிறிய பறவைகள்

மனிதர்களாலே இந்த வெயிலை தாங்க முடியவில்லை என்றால், சின்னஞ்சிறு பறவைகள் என்ன செய்யும்?. உணவு இல்லாமல்கூட கொஞ்சம் வாழலாம். நீரின்றி வாழ முடியாதே. எனவே நம்மையும், நம் பிள்ளைகளையும் காப்பதுபோல், நம்மைச்சுற்றி வாழும் சின்னஞ்சிறிய பறவைகளையும் காப்பாற்றுவோம். அவைகளின் தாகம் தீர்க்க வீட்டின் மொட்டை மாடிகளில் தண்ணீர் வைப்போம். தானியங்களைத் தூவுவோம். உணவுகளும் இடுவோம். மனிதநேயத்துடன் அதை இப்போதே தொடங்குவோம்.

இதுகுறித்து புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த மனிதநேய ஆர்வலர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை இங்கே பார்ப்போம்.

சுட்டெரிக்கும் வெயில்

புதுக்கோட்டையை சேர்ந்த இம்ரான்:- எங்களது வீட்டின் மாடியில் தண்ணீர் தொட்டி பக்கத்தில் டப்பா அல்லது குவளை, வாளியில் தண்ணீரை பிடித்து பறவைகளுக்காக வைத்துவிடுவது வழக்கம். மேலும் கோதுமை உள்பட தானியங்களை இரையாக தூவி விடுவோம். புறாக்கள், குருவிகள் உள்பட பறவைகள் வந்து இதனை சாப்பிட்டு விட்டு தண்ணீர் குடித்து செல்லும். மேலும் குரங்குகள் இந்த பகுதியை கடந்து செல்லும் போது தண்ணீரை குடித்து செல்லும். இதனால் நாங்கள் தொடர்ந்து இதனை கடைப்பிடித்து வருகிறோம். தற்போது சுட்டெரிக்கும் வெயிலால் கூடுதலாக தண்ணீர் நிரப்பி வைக்கிறோம்.

வனங்கள் அழிப்பு

விராலிமலையை சேர்ந்த கலைமாறன்:- காலநிலை மாற்றத்தால் ஒவ்வொரு ஆண்டும் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால் பறவைகள் மற்றும் விலங்குகள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றன. மக்கள் தொகை பெருக்கத்தால், விலங்குகளின் வாழ்விடங்கள், பறவையினங்கள் வாழும் அடர்ந்த வனப்பகுதிகள் அழிக்கப்பட்டு, குடியிருப்புகளாக மாறி வருகின்றன. அதுமட்டுமின்றி தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக ஏற்படும் கதிர்வீச்சுகளால் பல்வேறு பறவை இனங்கள் அழிந்து வருகின்றன. எஞ்சி இருக்கும் பறவை இனங்கள் தண்ணீர் இருக்கும் இடங்களை தேடி அலைகின்றன. தற்போது பல்வேறு தன்னார்வல அமைப்புகள் பறவைகளை மீட்டெடுக்கவும், உயிர் காக்கவும் முயன்று வருகின்றனர். எனவே அவர்களைப்போல் இல்லாவிட்டாலும் பொதுமக்களாகிய நாம் ஒவ்வொரு வீட்டிலும் தங்கள் குழந்தைகளுக்கு உணவு வழங்குவதில் கவனம் செலுத்துவதை போல் இந்த சிறிய உயிரினங்கள் வாழ்விற்கும் உதவும் விதமாக ஒவ்வொருவர் வீட்டிலும் சிறுதானியங்கள் அல்லது தண்ணீரை தங்களது வீட்டு மாடியில் வைத்தால் நன்றாக இருக்கும்.

குளம், குட்டைகள்

நமணசமுத்திரத்தை சேர்ந்த கணேசன்:- முன்பெல்லாம் அடர்ந்த காடுகள் நிறைந்து இருக்கும். ஆங்காங்கே மரங்கள் இருக்கும். அதில் இருக்கும் பழங்களை பறவைகள் உண்டு உயிர் வாழும். அதேபோல் பெரும்பாலான இடங்களில் ஆங்காங்கே குளம், குட்டைகள் காணப்படும். தற்போது குளம், குட்டைகள் எல்லாம் அழிக்கப்பட்டு வீடுகளாகவும், பெரிய தொழிற்சாலைகளாகவும் மாறிவிட்டன. இதனால் பறவைகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றன. தற்போது சுட்டெரிக்கும் வெயிலால் பறவைகள் தண்ணீர் இல்லாமல் அவதியடைந்து வருகின்றன. எனவே வீட்டு மாடிகளில் பறவைகளுக்கு தேவையான தானியங்கள் மற்றும் தண்ணீரை வைத்தால் அவை தாகம் தீர்த்துக்கொள்ளும்.

பறவைகளை பாதுகாக்கலாம்

அன்னவாசல் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன்:- வெட்டப்படும் மரங்களால் அதில் கூடு கட்டிய பறவைகள் வாழ வழியின்றி செத்து மடிகிறது. காலையில் இருந்த மரத்தை மாலையில் காணாது அதில் இருந்து கூட்டை எங்கே தேடுவது. இதனால் கண்ணீர் வடிக்கும் பறவைகள் ஏராளம். தற்போது சிட்டுக்குருவிகள் காடுகளில் இருந்து ஊருக்குள் வந்தாலும் கூடுக்கட்ட இடமில்லாமலும், வாகன போக்குவரத்து, இரைச்சல் உள்ளிட்ட காரணங்களால் வாழ வழியின்றி அழிந்து வருகிறது. சிட்டுக்குருவிகளை பற்றியும், பறவைகளை பற்றி விழிப்புணர்வு இருந்தாலும், அதற்காக பரிதாபப்படும் நாம், அழிந்துவரும் பறவைகளை பற்றி கவலைப்பட மறந்து விட்டோம். எனவே இயற்கையோடு பறவைகளையும் பாதுகாப்போம். அனைத்து பறவைகளும் குளத்திற்கு சென்று தண்ணீர் அருந்த கூடியவை அல்ல. வெயிலின் தாக்கத்தால் குளங்களில் தண்ணீர் எளிதில் வற்றிவிடும். எனவே பறவைகள் தண்ணீருக்காக அலையும் நிலை ஏற்படும். வீட்டின் மாடிகளில் பறவைகளுக்கு தண்ணீர் வைப்பதின் மூலம் அவை அழியாமல் பாதுகாக்கலாம். அன்னவாசல் போலீஸ் நிலையத்தில் உள்ள 10-க்கும் மேற்பட்ட மரங்களில் பறவைகளுக்காக தண்ணீர் தொட்டி வைக்கப்பட்டுள்ளது. இதில் தினமும் போலீசார் தண்ணீர் ஊற்றி வருகிறார்கள்.

உடல் சூட்டை தணிக்க...

விராலிமலை தாலுகா, பேராம்பூரை சேர்ந்த முத்துக்குமார்:- வெப்பத்தின் அளவு ஆண்டுக்காண்டு அதிகரித்து கொண்டே செல்கிறது. மனிதர்களால் கூட தாங்க முடியாத வெப்பத்தை சிறிய பறவைகள் எப்படி தாங்கும்?. கோடை வெயிலில் மனிதர்களுக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குளம், குட்டை உள்ளிட்ட நீர்நிலைகள் வறண்டு விட்டதால் பறவைகளுக்கு தண்ணீர் வழங்க வேண்டியது நமது கடமையாகும். உணவு இல்லாமல் கூட வாழலாம், ஆனால் நீரின்றி வாழ முடியாது. நமது சுற்றுப்புறங்களில் பறவைகளின் நடமாட்டத்தை கண்காணித்து அவற்றுக்கு தேவையான தானியங்கள், தண்ணீர் தொட்டி அமைக்க வேண்டும். முடிந்தால் பறவைகள் மூழ்கி குளித்து உடல் சூட்டை தணிக்கும் வகையிலும், வீட்டுவாசல், மொட்டை மாடி என வாய்ப்புகள் கிடைக்கும் இடத்தில் தண்ணீரை வைத்து அதன் தாகம் தீர்ப்போம். பருவ மழைக்காலம் தொடங்கும் வரை கல்லூரி மாணவர்கள், பட்டதாரி இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள் அனைவரும் இணைந்து களப்பணியை தொடங்குவோம். பறவைகளின் உயிரைக் காக்க சிறிய முயற்சிகளை மேற்கொள்வோம் என்று உறுதிமொழி எடுப்போம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இன்றே தொடங்கலாமே...

பல வீடுகளில் பறவைகளை தங்களது உறவுகளாவே வளர்த்து வரும் வேளையில், பறவைகளின் தாகம் தீர்க்க நாம் எடுக்கும் நல்ல நடவடிக்கைகளை நமது கடமையாகவும் பார்க்க வேண்டும். வாயில்லாத ஜீவன்களின் பசியை, தாகத்தை தீர்க்க இன்றே நல்ல நடவடிக்கையில் இறங்கலாமே!.

Tags:    

மேலும் செய்திகள்