'இனிமேல் தீர்ப்பை எங்கு பெறவேண்டுமோ அங்கு சென்று பெறுவோம்' - ஓ.பன்னீர் செல்வம் அதிரடி
இனிமேல் தீர்ப்பை எங்கு பெறவேண்டுமோ அங்கு சென்று பெறுவோம் என ஓ.பன்னீர் செல்வம் கூறினார்.;
சென்னை,
அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு நேற்று உத்தரவிட்டது. அதில், இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வான பொதுக்குழு கூட்டம் செல்லும் என்று அதிரடி தீர்ப்பளித்தது. இதன் மூலம் அதிமுக-வின் முழு கட்டுப்பாடும் எடப்பாடி பழனிசாமி வசமாகி உள்ளது. இதன் மூலம் ஓ.பன்னீர் செல்வம் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டது உறுதியானது.
இந்நிலையில், ஓ. பன்னீர் செல்வம் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,
நாங்கள் மக்களை நாடி செல்கின்ற நிலையில் இருக்கின்றோம். உறுதியாக மக்களிடம் நீதி கேட்போம். மக்கள் மன்றத்தில் நீதி கேட்போம்.
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா கடைபிடித்த அதிமுக சட்டவிதியை காப்பாற்ற நாங்கள் போராட்டிக்கொண்டிருக்கிறோம். ஜெயலலிதா தான் அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளர் என்று தீர்மானம் நிறைவேற்றினோம்.
அந்த தீர்மானத்தை ரத்து செய்ய யாருக்கு அதிகாரம் கிடையாது. இது தொண்டர்களுக்கான இயக்கம். எப்படி கூவாத்தூரில் நடந்ததோ அதேபோல் இந்த கட்சியை கைப்பற்றி தனது கைக்குள் வைத்துக்கொள்ள நினைக்கிறார்கள்.
இது தொண்டர்களுக்காக எம்.ஜி.ஆர். தொடங்கிய கட்சி. அதற்காக தான் நாங்கள் தர்ம யுத்தம் நடத்தி வருகிறோம். இப்போது மக்கள் மன்றத்தை நாடி செல்வதற்கு எங்கள் படை தயாராக புறப்பட்டுவிட்டது. உறுதியாக மக்களிடத்தில் நல்ல தீர்ப்பு கிடைக்கும்.
எந்த தீர்ப்பும் எங்களுக்கு பின்னடைவு இல்லை. இந்த தீர்ப்பு வந்தபின்னர் தான் எங்கள் தொண்டர்கள் எழுச்சியுடன் உள்ளனர். எழுச்சியுடன் உள்ளனர்.
எடப்பாடி அணி தான் திமுகவின் ஏ டு இசட் டீம். எங்களை நோக்கி எதாவது தவறு கூற முடியுமா? ஆயிரம் உள்ளது அது இனி ஒவ்வொன்றாக வெளியே வரும். கட்சி உடைந்துவிடக்கூடாது என இதுவரை பொறுமைகாத்தோம்.
இவர் (ஈபிஎஸ்) தொடங்கிய கட்சியா? இவர் கூறுவதற்கு என்ன அதிகாரம் உள்ளது. ஆணவத்தில் உச்சத்தில் இருக்கிறார். அந்த ஆணவத்தை அடக்கும் சக்தி அதிமுக தொண்டர்களிடம் உள்ளது. அது நிரூபணமாகப்போகிறது என்பதை நீங்கள் கண்கூடாக பார்ப்பீர்கள். மாவட்ட வாரியாக மக்களை சந்தித்து நீதி, நியாயம் கேட்போம். இனிமேல் தீர்ப்பை எங்கு பெறவேண்டுமோ அங்கு சென்று பெறுவோம். (சசிகலா, டிடிவி தினகரை சந்திக்க வாய்ப்பு உள்ளதா என்ற கேள்வி) போகப்போக உங்களுக்கு தெரியும். மக்களை சந்திக்கும்போது ரகசியங்களை வெளியிடுவோம்' என்றார்.
'புதிய கட்சி தொடங்க வேண்டிய அவசியமில்லை' என்று வைத்திலிங்கம் கூறினார். ஓபிஎஸ் தான் அதிமுக... அதிமுக தான் ஓபிஎஸ்' என்று புகழேந்தி கூறினார்.