முத்தரப்பு பேச்சுவார்த்தையில் தீர்வு ஏற்படாவிட்டால் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம் - என்.எல்.சி. ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கம் அறிவிப்பு
முத்தரப்பு பேச்சுவார்த்தையில் தீர்வு ஏற்படாவிட்டால் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம் என என்.எல்.சி. ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.;
மந்தாரக்குப்பம்,
நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தில் பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைளை என்.எல்.சி. தொழிலாளர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில், என்.எல்.சி. ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கம் சார்பில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளனர்.
இது தொடர்பான, விளக்க கூட்டம் நெய்வேலி பெரியார் சதுக்கத்தில் நேற்று மாலை நடைபெற்றது. இதற்கு சங்க தலைவர் அந்தோணி செல்வராஜ் தலைமை தாங்கினார், சிறப்பு தலைவர் ராமமூர்த்தி, பொதுச் செயலாளர் செல்வமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் சிறப்பு அழைப்பாளராக என்.எல்.சி. ஜீவா ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தின் சிறப்பு செயலாளர் சேகர் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசுகையில், ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தும், 10 ஆண்டுகளை கடந்த நிலையிலும் இதுவரைக்கும் பணிநிரந்தரம் செய்யப்படவில்லை.
வீடு, நிலம் கொடுத்த தொழிலாளர்களின் வாரிசுகளுக்கு வேலை வழங்க வேண்டும். மேலும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு பணி நிரந்தரம், ஊதிய உயர்வு வழங்க வேண்டும். வருகிற 14-ந்தேதி நடைபெறும் முத்தரப்பு பேச்சுவார்த்தையில் சுமூக தீர்வு ஏற்படாவிட்டால், 15-ந்தேதி நெய்வேலி மெயின் பஜாரில் நடைபெறும் கூட்டத்தில் வேலை நிறுத்த அறிவிப்பு தேதி அறிவிக்கப்படும் என தெரிவித்தார்.
தொடர்ந்து பெரியார் சதுக்கத்தில் இருந்து ஒப்பந்த தொழிலாளர்கள் பதாகைகள் கையில் ஏந்தியபடி அங்கிருந்து பேரணி செல்ல முயன்றனர். அப்போது அங்கிருந்த துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திரன் தலைமையிலான போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.