கோடநாடு கொலை வழக்கில் நீதி வேண்டும் முகநூலில் ஓ.பன்னீர்செல்வம் மகன் பதிவால் பரபரப்பு

கோடநாடு கொலை வழக்கில் நீதி வேண்டும் என்ற ஓ.பன்னீர்செல்வம் மகன் வி.ப.ஜெயபிரதீப்பின் முகநூல் பதிவால் பரபரப்பு ஏற்பட்டது

Update: 2022-07-05 15:54 GMT

கோடநாடு கொலை வழக்கு

கோத்தகிரி அருகே கோடநாட்டில் உள்ள மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான பங்களாவில் கொலை, கொள்ளை சம்பவம் நடந்தது. இது தமிழகத்தையே உலுக்கியது. இந்த சம்பவம் தொடர்பாக தற்போது மேல்விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. தனிப்படை போலீசார் இதுவரை 220-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். கடந்த சில வாரங்களாக கோடநாடு வழக்கு மீண்டும் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

இதற்கிடையேஅ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரம் சூடுபிடித்தது. ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகவும், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் ஓ.பன்னீர்செல்வத்திற்கு எதிராகவும் கருத்துகளை பரப்பி வருகின்றனர். இருவருக்கும் ஆதரவு, எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் ஆங்காங்கே அ.தி.மு.க.வினர் போஸ்டர்கள் ஒட்டி வருகின்றனர்.

ஓ.பன்னீர்செல்வம் மகன்

இந்நிலையில் கோடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் நீதி வேண்டும் என்று தமிழக அரசுக்கு ஓ.பன்னீர்செல்வத்தின் இளைய மகன் வி.ப.ஜெயபிரதீப் ஒரு கருத்தை தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில், "நீதி வேண்டும்..! எங்களின் குடும்ப தெய்வம் அம்மா (ஜெயலலிதா) வாழ்ந்த இல்லமான கோடநாடு பங்களாவில் மர்மமான முறையில் அதிர்ச்சிகரமான சம்பவங்கள் நடந்தேறி இருக்கின்றன. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட உண்மை குற்றவாளிகளை கண்டறிந்து சட்டத்தின் முன் நிறுத்தி தமிழக மக்களுக்கு தெளிவுபடுத்துமாறு தமிழக அரசை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக உண்மை தொண்டர்களின் சார்பாக தாழ்மையுடனும், வருத்தத்துடனும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த கருத்து சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அவருடைய கருத்துக்கு பலர் ஆதரவு தெரிவித்தும், விமர்சனம் செய்தும் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். இந்த பதிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்