தொழில்துறை தரவுகளை ஆராய்ந்து பார்க்காமல்அதிமுக ஆட்சி குறித்து பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்கேஎஸ்அழகிரிக்கு, முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத் கண்டனம்

தொழில்துறை தரவுகளை ஆராய்ந்து பார்க்காமல்அதிமுக ஆட்சி குறித்து பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் கேஎஸ்அழகிரிக்கு, முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத் கண்டனம் தொிவித்துள்ளாா்.

Update: 2023-05-27 18:45 GMT

முன்னாள் அமைச்சரும், கடலூர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளருமான எம்.சி.சம்பத் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

கடந்த 10 ஆண்டுகால அ.தி.மு.க. ஆட்சியில் தமிழகத்தில் முதன் முதலாக இரண்டு உலக தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தி பல கோடி ரூபாய் முதலீடுகளை பெற்றுள்ளதுடன், லட்சக்கணக்கான நபர்களுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை வாய்ப்பை பெற்றுக் கொடுத்துள்ளோம். திண்டிவனம் மற்றும் உளுந்தூர்பேட்டையில் தொடங்கப்பட உள்ள ஷூ கம்பெனிகள் அ.தி.மு.க. ஆட்சியில் திட்டமிடப்பட்டது தான். முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் முயற்சியால் கொரோனா காலகட்டத்தின் போது 72 நிறுவனங்களுடன் 65 ஆயிரத்து 634 கோடியில் ஒரு லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்க ஒப்பந்தம் போடப்பட்டது. கார் உற்பத்தி மற்றும் கார் உதிரி பாகங்கள் உற்பத்தியில் தமிழகம் உலக அளவில் முதல் 10 இடத்திற்குள் உள்ளது. இதெல்லாம் அ.தி.மு.க. ஆட்சியின் சாதனைகளாகும். ஆனால் தி.மு.க. ஆட்சியில் தமிழகத்தில் பல நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. தமிழகத்திற்கு வரவேண்டிய பல நிறுவனங்கள் பிற மாநிலங்களுக்கு சென்றுவிட்டன. இதெல்லாம் அறியாமல் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தெரியாமல் அறிக்கை விடுகிறார். கடலூர் மாவட்டத்தில் ரூ.50 ஆயிரம் கோடி முதலீட்டில் ஹால்டியா பெட்ரோ கெமிக்கல் தொழிற்சாலையை கொண்டுவர அ.தி.மு.க. ஆட்சியில் முன்மாதிரி புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தோம். ஆனால் ஆட்சி மாறி விட்டது. தற்போது தி.மு.க. ஆட்சியில் அந்த தொழிற்சாலையை கடலூர் மாவட்டத்திற்கு கொண்டுவர அழகிரி முயற்சி மேற்கொள்வாரா?. மேலும் 10 ஆண்டு கால அ.தி.மு.க. ஆட்சி பற்றி கே.எஸ்.அழகிரி தொழில்துறை தரவுகளை ஆராய்ந்து பார்க்காமல் பேசுவதை இனிமேலாவது தவிர்க்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்