ஓ.பன்னீர் செல்வம் யாருடன் சேர்ந்தாலும் எங்களுக்கு கவலை இல்லை - கடம்பூர் ராஜூ

அதிமுக தலைமையை ஏற்கும் கட்சியுடன் மட்டுமே கூட்டணி அமைக்கப்படும் என்று முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியுள்ளார்.

Update: 2022-08-10 05:57 GMT

கோவில்பட்டி,

கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையம் அருகே உள்ள அருள்மிகு ஸ்ரீ பாண்டி முனீஸ்வரர் கோயிலில் ஆடிக்கொடை விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்எல்ஏ கலந்து கொண்டு, சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் அன்னதானத்தை தொடங்கி வைத்தார். பின்னர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ செய்தியாளர்களிடம் பேசிய போது,

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது அவரது தனிப்பட்ட விருப்பம். முதலில் அரசியலுக்கு வருவதாகக் கூறினார், பின்னர் கால சூழ்நிலையினால் வரவில்லை என்றார். தற்போது கவர்னரை சந்தித்துவிட்டு வந்த பின் அரசியல் பற்றி பேசினேன் என்றார். கவர்னர் அரசியலுக்கு அப்பாற்பட்டவர் என்பது தான் எங்கள் கருத்து.

அதிமுகவில் இருந்து ஓ.பன்னீர் செல்வம் நீக்கப்பட்டுவிட்டார். அதன்பின் அவர் யாருடன் சேர்ந்தாலும் எங்களுக்கு கவலை இல்லை. அவர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பின் அவரது நிலைபாடு குறித்து நாங்கள் கருத்து கூறினால் சரியாக இருக்காது.

தமிழகத்தை பொருத்தவரையில் சட்டப்பேரவை, நாடாளுமன்றத் தேர்தல்களில் அதிமுக தலைமையில் தான் கூட்டணி அமைக்கப்படும். அதிமுக தலைமையை ஏற்கும் கட்சியுடன் மட்டுமே கூட்டணி அமைக்கப்படும்.

கோவில்பட்டியில் விமானப் பயிற்சி மையம் அமைக்கப்பட இருப்பது வரவேற்கக் கூடியது. 1991-ல் அதிமுக ஆட்சியில் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. சொல்வது எளிது செயலில் திமுக அரசு அதை நிறைவேற்ற வேண்டும் என்றார் அவர்.

Tags:    

மேலும் செய்திகள்