நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
சேத்தியாத்தோப்பில் நடந்த நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டார்.;
சேத்தியாத்தோப்பு,
விளைநிலங்களை பறிக்கும் என்.எல்.சி. நிறுவனத்தை கண்டித்தும், இதற்கு துணை போகும் தி.மு.க. அரசை கண்டித்தும் சேத்தியாத்தோப்பு பேருந்து நிறுத்தத்தில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு கோாிக்கைகளை வலியுறுத்தி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:- என்.எல்.சி. நிறுவனம், 35 ஆயிரம் ஆயிரம் ஏக்கர் நிலங்களை கையகப்படுத்தும்போது வீட்டிற்கு ஒருவருக்கு வேலை என கூறி நிலத்தை எடுத்துக்கொண்டு இதுவரை யாருக்கும் வேலை கொடுக்கவில்லை. தற்போது மேலும் 25 ஆயிரம் ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த என்.எல்.சி. நிறுவனம் துடிக்கிறது. கையகப்படுத்திய நிலங்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு சம அளவில் ரூ.25 லட்சம், நிரந்தர வேலை கொடுக்க வேண்டும். இல்லையென்றால் போராட்டம் தொடரும்.
வயது முதிர்ந்தவர்களுக்கு வேலை கொடுக்காமல் ரூ.1 லட்சம் இழப்பீடாக கொடுப்பதால் அதை வைத்து அவர்கள் எப்படி குடும்பம் நடத்த முடியும். மாற்று திட்டத்தின் கீழ் மின் உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். விளைநிலங்களை அழிக்காதே. சூரிய ஒளி, காற்றாலை, கடல் நீர்மூலம் மின் உற்பத்தியை எடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆயிரம் சாமிகள் உண்டு ஆனால் வாழ்வதற்கு ஒரு பூமி தான் உள்ளது. விவசாயம் இல்லாமல் வாழ முடியாது. விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய இழப்பீடு கிடைக்கவில்லை என்றால் போராட்டம் தொடரும். இவ்வாறு அவர் பேசினார். ஆர்ப்பாட்டத்தில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.