"இடைத்தேர்தலில் கமல்ஹாசனை சந்தித்து ஆதரவு கேட்க உள்ளோம்" - ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேட்டி

"கமல்ஹாசன், வேல்முருகன் உள்ளிட்டோரை சந்தித்து ஆதரவு கோர உள்ளேன் என ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறியுள்ளார்.

Update: 2023-01-23 05:42 GMT

சென்னை,

தமிழ்நாட்டில் பொதுத்தேர்தலுக்கு பிறகு, கொரோனா தாக்கம் காரணமாக அரசியல் களம் பெரும் பரபரப்பு இல்லாத நிலையிலேயே இருந்தன. இந்த சூழலில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தமிழக அரசியல் களத்தை பரபரப்புக்கு உள்ளாக்கி இருக்கிறது. முதல் முறையாக ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலை சந்திக்கிறது. இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் வாய்ப்பு காங்கிரசுக்கு வழங்கப்பட்டது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை அறிவித்து காங்கிரஸ் மேலிடம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதிமுகவின் இரு அணிகளும் போட்டியிடும் என்று அறிவித்துள்ளன. பாஜக போட்டியிட்டால் ஆதரவு அளிப்பதாக ஓ பன்னீர் செல்வம் தெரிவித்து இருக்கிறார். பாஜக தனது நிலைப்பாட்டை இன்னும் அறிவிக்கவில்லை. எடப்பாடி பழனிசாமி தரப்பு அதிமுகவினர் இடைத்தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டனர். இதனால் ஈரோடு இடைத்தேர்தல் பலமுனை போட்டி நிலவும் என தெரிகிறது. இதனால், தேர்தல் களம் அனல் பறக்க தொடங்கியிருக்கிறது.

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நிலையில் தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமை அலுவலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த பிறகு ஈவிகேஎஸ் இளங்கோவன் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மீது தமிழக மக்கள் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர். அது எங்களுக்கு வெற்றியை பெற்றுத்தரும். திமுக கூட்டணிக்கட்சிகள், கமலின் மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகளிடம் ஆதரவு கோருகிறோம். ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுகவினர் பிரசாரம் செய்வதற்கு நன்றி தெரிவித்தோம். ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்கு வருமாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்தேன்.

கமல்ஹாசனை சந்தித்து ஆதரவு கேட்க உள்ளோம்,கமல்ஹாசனை சந்திக்க நேரம் கேட்டுள்ளோம். இடைத்தேர்தலில் நிற்கலாமா? வேண்டாமா? என எதிரணி குழப்பத்தில் உள்ளது. எதிரணியில் இருப்பவர்கள் மிகப்பெரிய குழப்பத்தில் இருக்கிறார்கள் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்