குமரி மாவட்டத்தில் வாட்ஸ்-அப் குழுவை ஏற்படுத்தி கஞ்சா விற்றது அம்பலம்;கூரியர் மூலம் கடத்தியதாக கைதான ஆசாமிகள் பற்றி பரபரப்பு தகவல்

குமரியில் கூரியர் மூலம் கஞ்சா கடத்தியதாக கைதான ஆசாமிகள், வாட்ஸ் அப் குழுவை ஏற்படுத்தி கஞ்சா விற்றது அம்பலமாகி உள்ளது.

Update: 2022-06-20 19:23 GMT

நாகர்கோவில், 

குமரியில் கூரியர் மூலம் கஞ்சா கடத்தியதாக கைதான ஆசாமிகள், வாட்ஸ் அப் குழுவை ஏற்படுத்தி கஞ்சா விற்றது அம்பலமாகி உள்ளது.

கூரியர் மூலம் கஞ்சா கடத்தல்

ராஜாக்கமங்கலம் அருகே தம்மத்துகோணம் பகுதியில் தனிப்படை போலீசார் ரோந்து சென்ற போது ஆசாரிபள்ளம் அனந்தன்நகரை சோ்ந்த ஜெரீஸ் (வயது 24), கோணம் எறும்புக்காடு பகுதியை சேர்ந்த வினோத் (28) மற்றும் மேலராமன்புதூரை சோ்ந்த பிரிஜின் பிரகாஷ் (22) ஆகியோரை கஞ்சா விற்பனையில் ஈடுட்டதாக போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 1 கிலோ 300 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அவர்களிடம் இருந்து எடை எந்திரம், செல்போன்கள் மற்றும் 3 மோட்டார் சைக்கிள்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

பின்னர் கைதானவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், சென்னை மற்றும் வௌி மாநிலங்களில் இருந்து கூரியர் பார்சல் மூலமாக கஞ்சா கடத்தியது தெரியவந்தது. நாகர்கோவிலில் உள்ள ஒரு பார்சல் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்ட கஞ்சாவை வாங்கி அவர்கள் விற்பனை செய்ய முயன்ற போது சிக்கியது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் நேற்றுமுன்தினம் அதிரடியாக கூரியர் பார்சல் அலுவலகத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்.

மேலும் 2 பேர் கைது

இதற்கிடையே இந்த கஞ்சா கடத்தலில் மேலராமன்புதூர் பகுதியை சேர்ந்த வீரமணி (20), ராமன்புதூர் நாஞ்சில் நகரை சேர்ந்த திபு (19) என்பவருக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. பின்னர் மேலராமன்புதூர் பகுதியில் வைத்து வீரமணி மற்றும் திபுவை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

கைதான வீரமணி, திபுவிடம் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியானது. ஏற்கனவே கைதான ஜெரீஸ், வினோத், பிரிஜின் பிரகாஷ் ஆகியோர், இவர்களின் நண்பர்கள் ஆவர். திபு சென்னையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் என்ஜினீயரிங் படித்து வருகிறார். அப்போது அங்கு கஞ்சா வியாபாரிகளிடம் பழக்கம் ஏற்பட்டு, அவர்கள் மூலம் முகநூல், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்-அப் போன்ற சமூக வலைதளங்களில் தொடர்பு கொண்டு நாகர்கோவிலுக்கு கூரியர் பார்சல் மூலம் கஞ்சா கடத்தியது தெரிய வந்தது.

வாட்ஸ்-அப் குழு

மேலும் இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட 5 வாலிபர்களின் செல்போன், வங்கி கணக்கு மற்றும் சமூக வலைதளங்கள் ஆகியவற்றை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.

அப்போது இன்ஸ்டாகிராம், வாட்ஸ்-அப் ஆகியவற்றில் குழுக்கள் அமைத்து கஞ்சா விற்பனை நடத்தியது தெரியவந்தது. இந்த குழுவில் குமரி மாவட்டத்தை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் உள்ளனர் என்ற தகவலும் வெளியாகி உள்ளது. அதன்பேரிலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்