விழுப்புரம் மாவட்டத்தில்நீர்நிலை ஆக்கிரமிப்புகளை விரைந்து அகற்ற வேண்டும்கலெக்டர் உத்தரவு
விழுப்புரம் மாவட்டத்தில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை விரைந்து அகற்ற வேண்டும் என்று கலெக்டர் உத்தரவிட்டாா்.;
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகள் மற்றும் அரசு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பாக அனைத்துத்துறை அலுவலர்களுக்கான ஆலோசனைக்கூட்டம் விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் சி.பழனி தலைமை தாங்கினார். அப்போது அவர் கூறுகையில், மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகள் மற்றும் அரசு நிலங்களில் ஏதேனும் ஆக்கிரமிப்புகள் இருந்தால் அதை கண்டறிந்து அளவீடு செய்து உடனடியாக அந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி அதன் விவரத்தை அறிக்கையாக மாவட்ட நிர்வாகத்திற்கு சமர்பிக்க வேண்டும். நீர்நிலைகள், அரசு நிலங்களில் யாரேனும் குடிசை வீடுகள், கூரை வீடுகள் கட்டி ஆக்கிரமிப்பு செய்திருந்தால் அவர்களுக்கு மாற்று இடம் வழங்க விரைவாக ஏற்பாடு செய்துவிட்டு அந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். இப்பணியை எந்தவித பாரபட்சமும் இன்றி அதிகாரிகள் சிறப்பான முறையில் பணியாற்றி நமது மாவட்டத்தில் நீர்நிலைகள் மற்றும் அரசு நிலங்களில் ஆக்கிரமிப்புகளே இல்லாத நிலையை உருவாக்கிட வேண்டும் என்று அறிவுறுத்தினார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி, திண்டிவனம் சப்-கலெக்டர் கட்டா ரவிதேஜா, விழுப்புரம் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன், கலெக்டரின் கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்) சிவா உள்பட பலர் கலந்து கொண்டனர்.