சுற்றுலா பயணிகளின் விழிகளுக்கு விருந்து படைக்கும் அருவிகள்

கொடைக்கானலில், சுற்றுலா பயணிகளின் விழிகளுக்கு விருந்து படைக்கும் வகையில் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. பேரிஜம் ஏரியில் இன்று (வியாழக்கிழமை) முதல் படகு சவாரி செய்ய வனத்துறையினர் அனுமதி அளித்துள்ளனர்.

Update: 2023-09-27 16:49 GMT

பேரிஜம் ஏரி

சர்வதேச சுற்றுலாதலமான கொடைக்கானலில் இருந்து, சுமார் 35 கிலோமீட்டர் தொலைவில் பேரிஜம் ஏரி அமைந்துள்ளது. இயற்கை எழில் கொஞ்சும் வகையில் மரம், செடி, கொடிகள் அடர்ந்து படர்ந்து காட்சியளிக்கும் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் இந்த ஏரி அமைந்திருப்பது கூடுதல் சிறப்பு. இது, ஒரு சிறந்த நன்னீர் ஏரி ஆகும்.

'மலைகளின் இளவரசி'க்கு மகுடம் சூட்டும் 'பேரழகி' என்று இந்த ஏரியை குறிப்பிடலாம். இந்த ஏரியில் இருந்து வெளியேறும் உபரிநீர், சோத்துப்பாறை அணை வழியாக பெரியகுளம் நகருக்கு குடிநீராக பயன்படுகிறது.

ஏரிக்கு செல்லும் வழிநெடுகிலும் விழிகளுக்கு விருந்து படைக்கும் ஏராளமான இடங்கள் உள்ளன. குறிப்பாக தொப்பிதூக்கி பாறை, மதிகெட்டான்சோலை, பேரிஜம் ஏரிவியூ ஆகியவற்றின் பேரழகை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசிக்கலாம்.

சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி

பல்வேறு சிறப்புகளுக்கு சொந்தமான பேரிஜம் ஏரிக்கு செல்ல வேண்டுமானால், வனத்துறை அலுவலகத்தில் கட்டணம் செலுத்தி அனுமதி பெற வேண்டும். கடந்த சில தினங்களாக குட்டிகளுடன் காட்டு யானைகள் பேரிஜம் ஏரி பகுதியில் முகாமிட்டிருந்தன. இதனால் அங்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது.

இதற்கிடையே மாவட்ட வன அலுவலர் ரூபேஷ் குமார் மீனா தலைமையிலான வனத்துறையினர் பேரிஜம் பகுதியில் ஆய்வு செய்தனர். கடந்த 16 நாட்களுக்கு பிறகு, காட்டு யானைகள் அங்கிருந்து இடம் பெயர்ந்தது தெரியவந்தது.

இதனையடுத்து பேரிஜம் ஏரிக்கு செல்ல நேற்று காலை முதல் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். அதேநேரத்தில் தினமும் காலை 8.30 மணி முதல் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வாகனங்களுக்கு மட்டுமே அனுமதிச்சீட்டு வழங்கப்படும் என்று வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

இன்று முதல் படகுசவாரி

இதற்கிடையே பேரிஜம் ஏரியில் படகு சவாரி செய்ய வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். அதன்பேரில் வனத்துறை சார்பில், இன்று (வியாழக்கிழமை) முதல் பரிசல் சவாரி நடைபெறுகிறது. இதற்கான சோதனை ஓட்டம் நேற்று நடைபெற்றது.

இதுகுறித்து வனச்சரகர் சுரேஷ்குமார் கூறுகையில், அடர்ந்த வனப்பகுதியில் உள்ள பேரிஜம் ஏரியில் இன்று முதல் பரிசல் சவாரி இயக்கப்பட உள்ளது. இதற்காக 3 பரிசல் படகுகள் வாங்கப்பட்டுள்ளன. இதில் ஒரே நேரத்தில் 5 சுற்றுலா பயணிகள், ஓட்டுனரும் பயணம் செய்யலாம். இதற்காக ஒரு நபருக்கு ரூ.150 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றார்.

கூக்கால் அருவி

இந்தநிலையில் கொடைக்கானல் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று மதியம் 1 மணி முதல் 3 மணி வரை பல இடங்களில் மிதமான மழையும், சில இடங்களில் சாரல் மழையும் பெய்தது.

இதனால் சாலைகள், தெருக்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. குறிப்பாக கொடைக்கானலில் இருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கூக்கால் அருவி தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. அதில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்.

கொடைக்கானலின் நுைழவு வாயில் பகுதியில் உள்ள வெள்ளி நீர்வீழ்ச்சியிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர். அதன் அருகே நின்று புகைப்படம், செல்பி எடுத்து ஆனந்தம் அடைந்தனர்.

புலவச்சி ஆறு நீர்வீழ்ச்சி

இதேபோல் கொடைக்கானலில் இருந்து 50 கிலோமீட்டர் தொலைவில், தமிழக-கேரள எல்லை பகுதியில் பொருளூர் அருகே உள்ள புலவச்சி ஆறு நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

மேககூட்டங்கள் தரை இறங்க, பசுமை போர்த்திய மரங்கள் புடை சூழ, வெள்ளியை வார்த்து ஊற்றியதை போல வெண்ணிறமாய் பொங்கி வழியும் தண்ணீரை காணும் விழிகள் வியந்து போகும் வகையில் இந்த நீர்வீழ்ச்சி காட்சி அளிக்கிறது. இதனை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்த வண்ணம் உள்ளனர்.

வருகை அதிகரிப்பு

இந்தநிலையில் கொடைக்கானலுக்கு நேற்று சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருந்தது. இவர்கள் பைன்மரக்காடு, மோயர்பாயிண்ட், பிரையண்ட் பூங்கா, ரோஜா பூங்கா, பசுமை பள்ளத்தாக்கு, குணா குகை உள்ளிட்ட இடங்களை பார்த்து ரசித்தனர்.

மேலும் கொடைக்கானல் நகரின் மையப்பகுதியில் உள்ள நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்து சுற்றுலா பயணிகள் மகிழ்ந்தனர். ஏரியை சுற்றிலும் குதிரை சவாரி, சைக்கிளில் சவாரி செய்து உற்சாகம் அடைந்தனர்.

இதற்கிடையே இன்று (வியாழக்கிழமை) முதல் தொடர் விடுமுறை என்பதால், கொடைக்கானலுக்கு நேற்று மாலை முதல் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்தது. இதனால் நகரில் உள்ள அனைத்து ஓட்டல்கள், தனியார் காட்டேஜ்கள் நிரம்பின. கொடைக்கானலில் நிலவும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க கூடுதல் போலீசாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்