மணிமுத்தாறு அணையில் தண்ணீர் திறக்க வேண்டும்-ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. கோரிக்கை
மணிமுத்தாறு அணையில் தண்ணீர் திறக்க வேண்டும் என்று ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்துள்ளார்.
இட்டமொழி:
ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
வடகிழக்கு பருவமழை பெய்யும் காலத்தில் மணிமுத்தாறு அணையில் இருந்து விவசாய பணிகளுக்கு தண்ணீர் திறந்து விடுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு தண்ணீர் திறந்து விடுவது தாமதமாகி வருகிறது. தற்போது மணிமுத்தாறு அணை, மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த நல்ல மழையால் நிரம்பி இருக்கிறது. அதனால் பாணாங்குளம், மூலைக்கரைப்பட்டி, விஜயநாராயணம் உள்ளிட்ட நாங்குநேரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பாசன பகுதி விவசாயிகளும் பயன்பெறும் வகையில், மணிமுத்தாறு அணையில் இருந்து உடனடியாக தண்ணீர் திறந்துவிட வேண்டும்.
மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுத்து, மணிமுத்தாறு அணையில் இருந்து தண்ணீர் திறந்து, நாங்குநேரி தொகுதி விவசாய பெருமக்களின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.