மண்பாண்ட கூடத்தில் புகுந்த தண்ணீர்
மானாமதுரையில் பெய்த கன மழையால் மண்பாண்ட கூடத்தில் மழைநீர் புகுந்து பல லட்சம் மதிப்புள்ள மண்பாண்ட பொருட்கள் சேதமடைந்தன.;
அகல் விளக்குகள்
மானாமதுரை நகரம் மண்பாண்ட தொழிலுக்கு பிரசித்தி பெற்றது. இங்கு சீசனுக்கு ஏற்ற வகையில் பல்வேறு கலைநயமிக்க பொருட்கள் தயாரித்து உள்நாடு மட்டுமல்லாது வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. வருகிற நவம்பர் 26-ந்தேதி கொண்டாடப்படும் திருக்கார்த்திகை திருநாளன்று வீடுகள்தோறும் அகல் விளக்கேற்றி வைத்து வழிபடுவது வழக்கம்.
இதற்காக மானாமதுரையில் ஒரு மாதத்திற்கு முன்பாகவே அகல் விளக்குகள் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு அனுப்பப்படும். மேலும் வருகிற 14-ந்தேதி நவராத்திரி கொலு திருநாள் கொண்டாடப்பட உள்ளது. கடந்த சில நாட்களாக மானாமதுரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அகல்விளக்குகள் தயாரிக்கும் பணிகள் நடந்து வந்தன.
மழைநீர் புகுந்தது
மேலும் கொலு பொம்மைகள், விளக்குகள், கலையங்கள், மண்சட்டிகள் தயாரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்றிரவு பெய்த கனமழையால் அனைத்தும் சேதமடைந்தன. தயாரிக்கப்பட்ட பொருட்களை உலர வைப்பதும் சிரமம், உலர வைக்கப்பட்ட பொருட்களை சூளையில் வைத்து சுடுவதும் சிரமம், என தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் மண்பாண்ட பொருட்கள் தயாரிப்பு கூடங்களும் மழைநீரில் மூழ்கியுள்ளதால் தொழிலாளர்கள் செய்வதறியாது திகைத்து வருகின்றனர்.
இதுகுறித்து மண்பாண்ட தொழிலாளி ஒருவர் கூறுகையில், மண்பாண்ட தொழிலை நம்பி மானாமதுரை, திருப்புவனம், பூவந்தி உள்ளிட்ட பகுதிகளில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ளனர். மழை காரணமாக உற்பத்தி கூடங்களை சுற்றிலும் மழை நீர் தேங்கியுள்ளது. ஒரு சில தொழிலாளர்கள் வீட்டினுள் வைத்து பொருட்களை தயாரித்து வருகின்றனர்.
கேள்விக்குறி
மழை பெய்தால் தண்ணீர் வெளியேறுவதற்கு வழிகள் இல்லாததால் ஆண்டுேதாறும் இந்த பிரச்சினையை சந்திக்கிறோம். மழை நீரை வெளியேற்றுவதற்கான வழிகளை மாவட்ட நிர்வாகம் செய்ய வேண்டுமென தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தயாரிக்கப்பட்ட பொருட்களும் விற்பனைக்கு அனுப்ப முடியாமல் கூட்டுறவு சங்கத்தில் தேங்கி கிடக்கின்றன. இதனால் மண்பாண்ட தொழிலாளர்களின் வாழ்வு கேள்விக்குறியாகி வருகிறது. என்றார்.