பழனி பாலாறு-பொருந்தலாறு அணையில் தண்ணீர் திறப்பு

பழனி பாலாறு-பொருந்தலாறு அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.

Update: 2022-11-20 17:28 GMT

பழனி பகுதியில் பெய்த தொடர் மழையால் பாலாறு-பொருந்தலாறு, வரதமாநதி, குதிரையாறு உள்ளிட்ட அணைகள் நிரம்பின. இதையடுத்து பழனி, பாலசமுத்திரம், ஆயக்குடி பகுதிகளில் நெல் சாகுபடி பணியை விவசாயிகள் தொடங்கியுள்ளனர். இந்தநிலையில் தாடாக்குளம் கால்வாய் முதல்போக பாசனத்துக்காக பாலாறு-பொருந்தலாறு அணையில் இருந்து நேற்று முதல் 130 நாட்களுக்கு மொத்தம் 224.64 மில்லியன் கனஅடி தண்ணீர் திறக்க அரசு உத்தரவிட்டது.

அதன்படி இன்று பாலாறு-பொருந்தலாறு அணையில் இருந்து தாடாக்குளம் கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பழனி தாசில்தார் சசிக்குமார், பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் பாலு மற்றும் விவசாயிகள் கலந்துகொண்டு, கால்வாயில் திறக்கப்பட்ட தண்ணீரில் மலர்தூவி வரவேற்றனர். முன்னதாக அணை பகுதியில் சிறப்பு பூஜை செய்யப்பட்டது.

இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறும்போது, அணையில் இருந்து தாடாக்குளம் கால்வாய் பாசனத்துக்கு நேற்று முதல் வினாடிக்கு 20 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. இதன்மூலம் பாலசமுத்திரம் பகுதியில் உள்ள 844 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். அணையின் நீர்இருப்பை பொறுத்து 130 நாட்களில் தண்ணீர் திறப்பு அளவு மாறுபடும். தற்போது அணையில் 63 அடி வரை தண்ணீர் உள்ளது. அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 343 கனஅடியாக உள்ளது. இந்த ஆண்டு நல்ல மழை பெய்து அணை நிரம்பியதால் விவசாயத்துக்கு தண்ணீர் தட்டுப்பாடு இருக்காது என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்