வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்கும் திட்டம் வேகம் எடுக்கிறது

நெல்லை, தென்காசியில்‘ஜல்ஜீவன்’ திட்டத்துக்கு வரவேற்பு: வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்கும் திட்டம் வேகம் எடுக்கிறது

Update: 2022-10-11 21:44 GMT

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்கும் 'ஜல்ஜீவன்' திட்டப்பணிகள் வேகம் எடுத்துள்ளது. இந்த பணிகள் முன்கூட்டியே முடிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

'ஜல் ஜீவன்' திட்டம்

பாரத பிரதமர் நரேந்திர மோடி கடந்த2019-ம் ஆண்டு 'ஜல்ஜீவன் மிஷன்' திட்டத்தை தொடங்கி வைத்தார்.

இந்த திட்டமானது கிராமப்புறங்களில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் குழாய் இணைப்பு வழங்குவது ஆகும். அனைத்து ஊரக வீடுகளும், குடிநீர் பெறுவதில் தன்னிறைவு பெறுவதே 'ஜல்ஜீவன்' திட்டத்தின் நோக்கம்.

வேகம் எடுத்துள்ளது

நெல்லை மாவட்டத்தில் 'ஜல்ஜீவன்' திட்டப்பணிகள் வேகம் எடுத்துள்ளது. மாவட்டத்தில் ஊரகப்பகுதியில் மொத்தம் 204 பஞ்சாயத்துகளில் 1,337 கிராமங்கள் உள்ளன. இங்கு 2 லட்சத்து 86 ஆயிரத்து 263 வீடுகள் இருக்கிறது. கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் 31-ந் தேதிக்கு முன்னதாக மாவட்டத்தில் 40,172 வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு இருந்தது. மேலும் 14,154 முறையற்ற குடிநீர் இணைப்புகள் கண்டறியப்பட்டு, அவற்றுக்கான வைப்புத்தொகை பெற்று முறைப்படுத்தப்பட்டது.

முதலாவது நிதி ஆண்டில் அதாவது 2020-21-ம் ஆண்டில் 42 பஞ்சாயத்துகளில் உள்ள 180 கிராமங்களில் 31,068 வீடுகளுக்கு ரூ.32.23 கோடி செலவில் 156 குடிநீர் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது. 2021-22-ம் ஆண்டில் 340 திட்டப்பணிகள் ரூ.18.38 கோடியில் தேர்வு செய்யப்பட்டு 15,867 வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கும் பணி நடைபெற்று உள்ளது. 2022-23 நடப்பு நிதி ஆண்டில் அம்பை, சேரன்மாதேவி, பாப்பாக்குடி மற்றும் பாளையங்கோட்டை யூனியன்களில் உள்ள 18 பஞ்சாயத்துகளில் ரூ.12.15 கோடி செலவில் 12,239 வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.

100 சதவீதம் பணி முடிவு

பாப்பாக்குடி யூனியனில் இந்த ஆண்டுக்குள்ளும், வருகிற 2023-ம் ஆண்டு மார்ச் மாதம் இறுதிக்குள் அம்பை, சேரன்மாதேவி ஆகிய 2 யூனியன்களிலும் 100 சதவீதம் 'ஜல்ஜீவன்' திட்டத்தின் கீழ் குடிநீர் இணைப்புகள் வழங்கும் பணிகள் முடிக்க திட்டமிடப்பட்டு பணி நடைபெற்று வருகிறது.

இதுதவிர பாளையங்கோட்டை, மானூர், நாங்குநேரி, வள்ளியூர் மற்றும் ராதாபுரம் ஆகிய 5 யூனியன்களில் பணிகள் முடிக்கப்பட வேண்டி உள்ளது. மாவட்டத்தில் 'ஜல்ஜீவன்' திட்டத்தின் கீழ் அனைத்து வீடுகளுக்கும் முன்கூட்டியே குடிநீர் குழாய் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

குடிநீர் தேவை பூர்த்தியாகும்

'ஜல்ஜீவன்' திட்டம் கிராமப்புற பெண்களின் வாழ்க்கையை மாற்றி உள்ளது. முன்பு பெண்கள் நடந்து சென்று குடங்களில் குடிநீரை சுமந்து வந்தனர். தற்போது வீட்டு வாசலிலேயே குடிநீர் கிடைப்பதால் வாழ்க்கை எளிமையாகி உள்ளது. ஆனால், பல பஞ்சாயத்துகளில் பணிகள் நிறைவு பெறாமலும், அரை குறையாகவும், ஒரு சில பஞ்சாயத்துகளில் எந்தவித பணியும் தொடங்காமல் உள்ளதால் மக்கள் சிரமம் அடைகின்றனர்.

'ஜல்ஜீவன்' திட்டத்தால் கிராமப்பகுதி மக்களின் குடிநீர் தேவை 100 சதவீதம் பூர்த்தியாகும் என்பதால் இத்திட்டத்தில் கூடுதல் கவனம் செலுத்தி விரைவுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

பெண்கள் கருத்து

இதுதொடர்பாக நெல்லை மாவட்டத்தை சேர்ந்த பெண்கள் கருத்து தெரிவித்து உள்ளனர். பாளையங்கோட்டை யூனியன் சீவலப்பேரியை சேர்ந்த கஸ்தூரி:-

எங்களது வீட்டுக்கு இதுவரை குடிநீர் இணைப்பு கிடையாது. தெரு குழாய் அல்லது வேறு வீடுகளுக்கு சென்று தண்ணீர் பிடித்து பயன்படுத்தி வந்தோம். தற்போது மத்திய அரசின் 'ஜல்ஜீவன்' திட்டத்தின் கீழ் எங்களது பகுதியில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு கொடுத்து உள்ளனர். மேலும், எங்களுக்கு 24 மணி நேரமும் சீராக தண்ணீர் கிடைக்கிறது. இது மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.

கீழத்தெருவை சேர்ந்த கோமதி:- 'ஜல்ஜீவன்' திட்டத்தின் கீழ் குடிநீர் இணைப்பு கிடைத்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.

வேளாளர் தெருவை சேர்ந்த பிரேமா:- எங்கள் தெருவில் குடிநீர் இணைப்பு புதிதாக வழங்கி உள்ளனர். இதன்மூலம் தாமிரபரணி ஆற்று தண்ணீர் கிடைக்கிறது. விடுபட்ட வீடுகளுக்கும் குடிநீர் இணைப்புகள் முழுமையாக கொடுக்க வேண்டும்.

நாங்குநேரி யூனியன் சங்கனாங்குளம் பஞ்சாயத்து மன்னார்புரத்தைச் சேர்ந்த ஜோ.ஜோதி:- ஜல்ஜீவன் திட்டம் மூலம் எங்கள் வீட்டுக்கு குடிநீர் இணைப்பு வழங்கி உள்ளனர். இதனால் நாங்கள் குடிநீருக்காக வெளியே எங்கேயும் செல்ல வேண்டியது இல்லை. வீட்டுக்கே தண்ணீர் வந்து விடுகிறது. இதனால் வீட்டு வேலைகள் செய்வதற்கு மிகவும் இலகுவாக உள்ளது.

தென்காசி

ெதன்காசி மாவட்டத்தில் மத்திய அரசின் ஜல்ஜீவன் மிஷன் திட்டம் 2020-2021-ம் ஆண்டில் ஊரக வளர்ச்சி முகமையின் சார்பில் கிராமப்புறங்களில் அமல்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் 403 குக்கிராமங்களுக்கு ரூ.82 கோடியே 17 லட்சம் செலவில் 1 லட்சத்து 5 ஆயிரத்து 390 குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டு உள்ளன. மேலும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் பாப்பாக்குடி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் 12 குக்கிராமங்களுக்கு ரூ.1 கோடியே 25 லட்சம் செலவில் 1,649 குடிநீர் இணைப்புகள் வழங்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த திட்டத்துக்கு கிராமப்புற மக்கள் மிகுந்த வரவேற்பு தெரிவித்து உள்ளனர்.

இதுகுறித்து தென்காசி அருகே உள்ள ஆயிரப்பேரி கிராமத்தைச் சேர்ந்த இல்லத்தரசி முத்துமாரி கூறும்போது, 'ஜல்ஜீவன் மிஷன் திட்டம் எங்களது கிராமத்திற்கு சுமார் ஒரு ஆண்டுக்கு முன்பு வந்தது. இந்த திட்டத்தின் கீழ் பல்வேறு வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு உள்ளது. அதேபோன்று எங்களது வீட்டுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டது. முன்பு நாங்கள் ஆழ்குழாய் கிணற்று தண்ணீரை தான் உபயோகித்து வந்தோம். அது உப்பு தண்ணீராக இருந்தது. தற்போது ஜல்ஜீவன் மூலம் நல்ல தண்ணீரை பெற்று வருகிறோம். அந்த தண்ணீர் மிகவும் சுவையாக உள்ளது' என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்