முக்கோணம் - தளி சாலையில் குழாய் உடைந்து குடிநீர் வீணாகிறது.

முக்கோணம் - தளி சாலையில் குழாய் உடைந்து குடிநீர் வீணாகிறது.;

Update: 2023-05-20 12:37 GMT

தளி

முக்கோணம் - தளி சாலையில் குழாய் உடைந்து குடிநீர் வீணாகிறது.

குடிநீர் திட்டங்கள்

உடுமலை அடுத்த திருமூர்த்தி அணையின் மூலமாக சுற்றுப்புற கிராமங்கள் பயன்பெறும் வகையில் உடுமலை, கணக்கம்பாளையம், பூலாங்கிணர், மடத்துக்குளம், குடிமங்கலம் உள்ளிட்ட கூட்டு குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தளி வாய்க்காலை ஆதாரமாகக் கொண்டு செயல்படுத்தப்படும் இந்த திட்டங்கள் மூலமாக சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் பயன் அடைந்து வருகின்றனர். இந்த நிலையில் குடிநீர் திட்ட குழாய்கள் ஆங்காங்கே உடைந்து தண்ணீர் வீணாகி வருகிறது.

இதனால் பொதுமக்கள் தேவையான அளவு குடிநீர் கிடைக்காமல் அவதிப்படுகிறார்கள். அந்த வகையில் முக்கோணம் - தளி சாலையில் ரெயில் பாதைக்கு அருகே குடிநீர் குழாய் உடைந்து ஏராளமான தண்ணீர் வீணாகி வருகிறது. அவற்றை சீரமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.

இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-

திருமூர்த்திஅணையின் மூலமாக செயல்படுத்தப்படுகின்ற கூட்டு குடிநீர் திட்டங்கள் சுற்றுப்புற கிராமங்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம் ஆகும். இதனால் கோடைகாலத்தில் கூட ஓரளவுக்கு குடிநீர் தட்டுப்பாடு இல்லாமல் பொதுமக்கள் தேவையை பூர்த்தி செய்து வருகின்றனர். ஆனால் குழாயில் உடைப்பு ஏற்படும்போது அதை துரித கதியில் சீரமைப்பதற்கு அதிகாரிகள் முன் வருவதில்லை.

சீரமைக்க வேண்டும்

இதனால் ஏராளமான தண்ணீர் உடைப்பின் மூலமாக வீணாகி கழிவு நீர் கால்வாயிலும் அருகில் உள்ள விளைநிலங்களுக்கும் சென்று வருகிறது.

அணையிலும் குறைவான நீர்இருப்பே உள்ளது. எனவே முக்கோணம் - தளி சாலையில் ரயில் பாதைக்கு அருகே ஏற்பட்டுள்ள குழாய் உடைப்பை உடனடியாக சீரமைத்து தட்டுப்பாடு இல்லாத தண்ணீர் விநியோகம் செய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


Tags:    

மேலும் செய்திகள்