ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 24 ஆயிரம் கனஅடியாக சரிவு

கர்நாடக, கேரள மாநிலங்களில் மழை குறைந்ததால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 24 ஆயிரம் கனஅடியாக சரிவடைந்தது.

Update: 2024-08-06 02:57 GMT

பென்னாகரம்,

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்ததன் காரணமாக கர்நாடகாவில் உள்ள கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகள் நிரம்பியதையடுத்து உபரிநீர் தமிழகத்துக்கு காவிரியில் வெளியேற்றப்பட்டது. அதிகபட்சமாக 2 லட்சம் கனஅடி வரை தண்ணீர் திறக்கப்பட்டது

தற்போது கர்நாடக, கேரள மாநிலங்களில் மழை குறைந்தது. இதனால் 2 அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் திறந்து விடப்படும் தண்ணீரின் அளவும் குறைக்கப்பட்டது. நேற்று முன்தினம் 2 அணைகளில் இருந்தும் வினாடிக்கு 90 ஆயிரத்து 431 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. இது நேற்று வினாடிக்கு 38 ஆயிரத்து 315 கனஅடியாக குறைக்கப்பட்டது.

இதன் காரணமாக ஒகேனக்கல்லுக்கு தண்ணீர் வரத்து படிப்படியாக குறைய தொடங்கியது அதன்படி நேற்று முன்தினம் வினாடிக்கு 85 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று மாலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு 31 ஆயிரம் கனஅடியாக குறைந்தது.

இந்நிலையில் காவிரி ஆற்றில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து விநாடிக்கு 24,000 கனஅடியாக குறைந்துள்ளது. கர்நாடக அணைகளில் நீர்திறப்பு குறைப்பால் 15 நாட்களுக்குப் பின் பிலிகுண்டுலுவில் வெள்ளப்பெருக்கு குறைந்துள்ளது.

இந்த சூழலில் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து மேலும் குறைய வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே 23-வது நாளாக ஒகேனக்கல்லில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேட்டூர் அணை

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததன் காரணமாக கடந்த 30-ந் தேதி மாலை அணை முழு கொள்ளளவை எட்டி நிரம்பியது. அணையில் 124 அடி தண்ணீர் தேக்கி வைக்க முடியும். ஆனால் அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் உபரிநீர் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது. அந்த வகையில் அணையில் இருந்து கடந்த 7 நாட்களாக தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் நீர்வரத்தை பொறுத்து உபரிநீரின் அளவு அதிகரித்தோ, குறைத்தோ திறந்து விடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 50 ஆயிரம் கன அடியில் இருந்து 26 ஆயிரம் கன அடியாக குறைந்துள்ளது. தற்போது அணையின் நீர்மட்டம் 120 அடியாக உள்ளது. நீர் இருப்பு 93.47 டி.எம்.சி.யாக உள்ளது.

கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு விநாடிக்கு 500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. பாசனத்திற்காக விநாடிக்கு 21,500 கன அடி, உபரிநீர் விநாடிக்கு 4,500 கன அடியாக திறக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையின் 16 கண் உபரி நீர் போக்கியில் நீர் திறப்பு விநாடிக்கு 4,500 கன அடியாக குறைந்தது.

Tags:    

மேலும் செய்திகள்