நீர்நிலை ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும்

வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்க உள்ளதால் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்று ஆய்வுக்கூட்டத்தில் கலெக்டர் குமாரவேல்பாண்டியன் அறிவுறுத்தினார்.;

Update: 2022-09-09 17:38 GMT

வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்க உள்ளதால் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்று ஆய்வுக்கூட்டத்தில் கலெக்டர் குமாரவேல்பாண்டியன் அறிவுறுத்தினார்.

ஆய்வுக்கூட்டம்

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆர்த்தி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் விஜயராகவன், வேலூர் மாநகராட்சி கமிஷனர் அசோக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்துக்கு வேலூர் கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தலைமை தாங்கி பேசியதாவது:-

வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்க உள்ளது. வேலூர் மாவட்டத்தில் கடந்தாண்டு இயல்பை விட அதிகளவு மழை பெய்தது. அதனால் அதிக சேதங்களை எதிர்கொண்டோம். அந்த சமயத்தில் அனைத்துத்துறை அரசு அதிகாரிகளும் திறம்பட செயல்பட்டு பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு சிறப்பாக பணியாற்றினார்கள். அதேபோன்று இந்தாண்டும் அரசு அதிகாரிகள் சிறப்பாக பணியாற்ற வேண்டும்.

நீர்நிலை ஆக்கிரமிப்புகள்

இந்தாண்டு பருவமழை தொடங்குவதற்கு முன்பாக நீர்நிலை ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும். குறிப்பாக அணைக்கட்டு, பேரணாம்பட்டு, குடியாத்தம், மோர்தானா உள்ளிட்ட இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். வேலூர் மாநகராட்சி பகுதிகளில் மழைநீர் வீடுகளுக்கு செல்லாதவாறு தடுக்க அதிகாரிகள் வாக்கி டாக்கிகளை பயன்படுத்தி மழை வெள்ளம் குறித்து உடனுக்குடன் தகவல்களை பொதுமக்களுக்கு தெரிவிக்க வேண்டும்.

நெடுஞ்சாலைகளில் மரம் அல்லது மரக்கிளைகள் விழுந்தால் அதனை உடனடியாக அப்புறப்படுத்த தேவையான உபகரணங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். இதேபோல் மழையளவை துல்லியமாக கணக்கிட மழைமானி சரியாக செயல்படுகிறதா என்பதையும் கண்காணிக்க வேண்டும். அனைத்துறை சார்பிலும் முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். பருவமழையின்போது அனைத்துத்துறை அதிகாரிகளும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றார்.

இதில், அனைத்துத்துறை அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்