தண்ணீர் இன்றி வறண்டு கிடக்கும் நீர்நிலைகள்

நெகமம் பகுதியில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடையாததால் தண்ணீர் இன்றி குளம், குட்டை உள்ளிட்ட நீர்நிலைகள் வறண்டு கிடக்கின்றன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.;

Update: 2023-08-07 20:30 GMT

நெகமம்

நெகமம் பகுதியில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடையாததால் தண்ணீர் இன்றி குளம், குட்டை உள்ளிட்ட நீர்நிலைகள் வறண்டு கிடக்கின்றன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.

குளம், குட்டைகள்

கிணத்துக்கடவு ஒன்றியத்துக்கு உட்பட்ட நெகமம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் ஏராளமான குக்கிராமங்கள் உள்ளன. இங்கு விவசாயமே பிரதான தொழிலாக உள்ளது. இதற்கு தேவையான பாசனத்துக்கும், பொதுமக்களின் குடிநீர் தேவைக்கும் குளம், குட்டை, தடுப்பணை உள்ளிட்ட நீர்நிலைகள் அமைக்கப்பட்டு உள்ளன. ஆண்டுதோறும் இந்த நீர்நிலைகள் பருவமழை மூலம் நிரம்பும் சமயத்தில் குடிநீருக்கும், பாசனத்துக்கும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படாது.

வறண்டு கிடக்கிறது

இந்தநிலையில் கடந்த ஆண்டு தொடர்ந்து பெய்த தென்மேற்கு பருவமழை மற்றும் வடகிழக்கு பருவமழைக்கு பிறகு இந்த ஆண்டு பல மாதமாக வெயிலின் தாக்கமே அதிகளவில் இருந்தது. கடந்த மாத தொடக்கத்தில் சில நாட்கள் மழை பெய்தாலும், வெயிலின் தாக்கம் அதிகரித்ததால் பல்வேறு கிராமங்களில் உள்ள குளம், குட்டை, தடுப்பணை உள்பட நீர்நிலைகளில் தண்ணீர் குறைந்து வருகிறது.

இந்த மாதம் ெதாடக்கத்தில் பெய்ய வேண்டிய தென்மேற்கு பருவமழை தாமதத்தால் அனைத்து நீர்நிலைகளிலும் தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுகிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.

மழை தீவிரம் அடைந்தால்...

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட காலகட்டத்தில் தென்மேற்கு பருவமழை மற்றும் வடகிழக்கு பருவமழை பெய்வது மட்டுமின்றி கோடை மழையும் பெய்வதால் நெகமம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் உள்ள நீர்நிலைகளில் ஆண்டுதோறும் தண்ணீர் இருக்கும். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக மழை அளவு குறைந்து உள்ளது.

இதனால் நீர்நிலைகளில் பெரும்பாலும் தண்ணீர் இன்றி புதர் செடிகள் முளைத்துதான் காணப்படுகிறது.

இனிவரும் நாட்களில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்தால் மட்டுமே குளம், குட்டை, தடுப்பணை உள்ளிட்ட நீர்நிலைகளில் தண்ணீர் இருக்கும். அதற்கு முன்பாக அவற்றை தூர்வாரி ஆழப்படுத்த சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்