வன விலங்குகளுக்கு தண்ணீர், உணவு தானியங்கள்
ஏலகிரி மலையில் கோடை வெயிலில் தண்ணீர் தேடி திரியும் வன விலங்குகளுக்கு போலீசார் உணவு மற்றும் தண்ணீர் வழங்கி வருகின்றனர்.;
வன விலங்குகள்
ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏலகிரி மலையில் கரடி, மயில், மான் மற்றும் குரங்குகள் உள்ளிட்ட வன விலங்குகள் காட்டு பகுதிகளில் வசித்து வருகின்றன. இந்த வன விலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு வருகின்றன. குறிப்பாக குரங்குகள் பொன்னேரி மலையடிவாரத்தில் இருந்து ஏலகிரி மலை செல்லும் சாலை வரை கொண்டை ஊசி வளைவுகளில் தண்ணீர் தேடி வருகின்றன. இதனால் சில நேரங்களில் குரங்குகள, வாகன ஓட்டிகள் யாராவது உணவு மற்றும் தண்ணீர் தருவார்களா என சாலையில் காத்துக் கிடக்கின்றன.
அப்போது குரங்குகள் சாலையை கடக்கு நேரத்தில் விபத்துகள் ஏற்பட்டு குரங்குகள் இறக்கின்றன. தற்போது கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் வன விலங்குகள் தண்ணீர் தேடி காட்டைவிட்டு வெளியே வரும்நிலை ஏற்பட்டுள்ளது.
உணவு, தண்ணீர்
இதனால் வேலூர் சரக போலீஸ் டி.ஐ.ஜி. முத்துசாமி வழிகாட்டுதலின் படியும், திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் அறிவுரையின் படியும், ஏலகிரி மலை போலிஸ் நிலையம் சார்பில் மண் பாத்திரங்களில் ஏலகிரி மலை போலீஸ் நிலையம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் பறவைகள் மற்றும் விலங்களுக்கு தானியங்கள் மற்றும் தண்ணீர் நிரப்பி வைத்தனர்.
நேற்று ஏலகிரி மலை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் மணி தலைமையில் போலீசார் சுமார் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் மண் குடவையில் உணவு தானியங்கள் மற்றும் தண்ணீர் நிரப்பினர். ஏலகிரி மலை போலிசார் பறவைகள் மற்றும் விலங்குகளுக்கு உணவு தானியங்கள் மற்றும் தண்ணீர் வைத்த சிறுது நேரத்தில் குரங்குகள் வந்து தண்ணீர் அருந்தி சென்றது.