கணக்கம்பாளையம் கூட்டுக்குடிநீர் திட்டத்தில் நிலவிய குடிநீர் பற்றாக்குறைக்கு தீர்வு காணப்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கடும் குடிநீர் தட்டுப்பாடு
உடுமலையை அடுத்த திருமூர்த்தி அணையின் மூலமாக சுற்றுப்புற கிராமங்கள் பயன்பெறும் வகையில் உடுமலை, கணக்கம்பாளையம், பூலாங்கிணர், குடிமங்கலம், மடத்துக்குளம் கூட்டுக் குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தளி வாய்க்காலை ஆதாரமாகக் கொண்டு செயல்படுத்தப்படும் இந்த திட்டங்கள் மூலமாக பொதுமக்கள் பயன் அடைந்து வருகின்றனர்.
இந்த நிலையில் பூலாங்கிணர் கூட்டுக்குடிநீர் திட்டத்தை குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் பல்வேறு காரணங்களை கூறி திடீரென ரத்து செய்து விட்டனர். அதற்கு உண்டான மாற்று ஏற்பாடுகளையும் கடந்த 6 மாத காலமாக அதிகாரிகள் செய்து தராமல் அலட்சியம் காட்டி வந்தனர். இதன் காரணமாக கிராமங்களில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து பொதுமக்களும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
தீர்வு காண கோரிக்கை
இந்த சூழலில் கணக்கம்பாளையம் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் பயன்பெறும் 17 ஊராட்சிகளை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர்கள் குடிநீர் பற்றாக்குறைக்கு தீர்வு காணுமாறு கோரிக்கை வைத்தனர்.அதைத் தொடர்ந்து தி.மு.க.உடுமலை கிழக்கு ஒன்றிய செயலாளர் எஸ்.கே.தங்கராஜ் என்ற மெய்ஞானமூர்த்தி மற்றும் ஊராட்சி மன்றத் தலைவர்கள் செய்தி மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதனை சந்தித்து குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணுமாறு வலியுறுத்தினார்கள்.
இதையடுத்து அமைச்சர், கலெக்டர் கிறிஸ்துராஜுக்கு பரிந்துரைத்தார். அதன் பேரில் மாவட்ட கலெக்டர் கடந்த 14-ந் தேதியன்று திருமூர்த்தி அணைக்கு நேரில் சென்று கூட்டுக்குடிநீர் திட்டத்தை ஆய்வு செய்தார். அதைத்தொடர்ந்து ரத்து செய்யப்பட்ட பூலாங்கிணர் கூட்டு குடிநீர் திட்டத்தில் கூடுதலாக பொருத்தப்பட்டு இயங்காமல் இருந்த மின்மோட்டாரை இயக்குவதென முடிவு செய்யப்பட்டது.
பொதுமக்கள் மகிழ்ச்சி
இதையடுத்து நேற்று முன்தினம் பூலாங்கிணர் கூட்டுக்குடிநீர் திட்டத்தில் கூடுதலாக பொருத்தப்பட்டிருந்த 20 எச்.பி. மின் மோட்டார் இயக்கப்பட்டது. அந்த தண்ணீர் கணக்கம்பாளையம் கூட்டுக்குடிநீர் திட்டத்தில் சேர்த்து விடப்பட்டு உள்ளது. இதனால் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான சூழல் ஏற்பட்டு உள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
மேலும் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு ஏற்படுத்திய அமைச்சர் மு.பெ. சாமிநாதன், கலெக்டர் கிறிஸ்துராஜ் மற்றும் உடுமலை கிழக்கு ஒன்றிய தி.மு.க. நிர்வாகிகளுக்கு நன்றியை தெரிவித்துக்கொண்டனர். அத்துடன் தட்டுப்பாடு இல்லாத குடிநீர் கிடைப்பதற்கு ஏதுவாக கணக்கம்பாளையம் கூட்டுக்குடிநீர் திட்டத்தில் கூடுதலாக மின் மோட்டார்களை பொருத்துவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுவேண்டுகோள் விடுத்து உள்ளனர்.