பஞ்சப்பள்ளி சின்னாறு அணையில் இருந்து தர்மபுரி நகருக்கு வரும் குடிநீர் குழாயில் உடைப்பு

Update: 2022-10-27 18:45 GMT

தர்மபுரி:

பஞ்சப்பள்ளி சின்னாறு அணையில் இருந்து தர்மபுரி நகருக்கு வரும் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

வெள்ளப்பெருக்கு

தர்மபுரி நகருக்கு பஞ்சப்பள்ளி சின்னாறு அணையில் இருந்து குழாய் மூலம் குடிநீர் கொண்டுவரப்பட்டு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக அணையில் இருந்து உபரிநீர் அதிக அளவில் வெளியேற்றப்படுவதால் சின்னாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக அத்திமுட்லு பகுதியில் தர்மபுரி நகருக்கு வரும் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது ஆற்றில் அதிகளவு தண்ணீர் சென்று கொண்டிருப்பதால் இந்த குடிநீர் குழாயை சீரமைக்கும் பணி மேற்கொள்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் தர்மபுரி நகருக்கு கடந்த 3 நாட்களாக பஞ்சப்பள்ளி குடிநீர் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

அறிவுறுத்தல்

பஞ்சப்பள்ளி அணையில் இருந்து குடிநீர் வழங்குவது தடைபட்டுள்ளதால், மாற்று ஏற்பாடாக தர்மபுரி பொதுமக்களுக்கு ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. அத்திமுட்லு பகுதியில் உடைப்பு ஏற்பட்டுள்ள குடிநீர் குழாயை சீரமைக்கும் பணியில் நகராட்சி அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இந்தநிலையில் மழை காலம் தொடங்கி உள்ளதால் தற்போது வரும் ஒகேனக்கல் குடிநீரை பொதுமக்கள் சிக்கனமாக பயன்படுத்துவதுடன் அந்த குடிநீரை நன்றாக காய்ச்சி பயன்படுத்த வேண்டும் என்று நகராட்சி ஆணையாளர் சித்ரா சுகுமார் அறிவுறுத்தி உள்ளார்.

மேலும் செய்திகள்