வாருகாலில் அள்ளப்படும் கழிவுகளை உடனே அகற்ற வேண்டும்
வாருகாலில் அள்ளப்படும் கழிவுகளை உடனே அகற்ற வேண்டும் என நகரசபை கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.;
அருப்புக்கோட்டை,
வாருகாலில் அள்ளப்படும் கழிவுகளை உடனே அகற்ற வேண்டும் என நகரசபை கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
சாதாரண கூட்டம்
அருப்புக்கோட்டை நகர்மன்ற குழுவின் சாதாரண கூட்டம் நகர்மன்ற தலைவர் சுந்தரலட்சுமி தலைமையில் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. நகர்மன்ற துணைத்தலைவர் பழனிச்சாமி, நகராட்சி ஆணையாளர் அசோக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் அருப்புக்கோட்டை நகராட்சி மயானத்திற்கு உள்ளே இறந்தவர்களின் சடலங்களை எரிக்க மட்டுமே அனுமதி உண்டு. புதைப்பதற்கு அனுமதி கிடையாது. ஏற்கனவே புதைத்தவர்களை அவர்களின் குடும்பத்தினர் தாங்களாகவே நினைவு சின்னங்களை அகற்ற வேண்டும். இல்லையென்றால் நகராட்சியே எந்திரம் கொண்டு அனைத்தையும் அகற்றும் என தெரிவிக்கப்பட்டது.
கால தாமதம்
தொடர்ந்து கூட்டத்தில் உறுப்பினர்கள் தங்களது கோரிக்கைகள் குறித்து கூறியதாவது:-
மீனாட்சி:- விருதுநகர் மெயின் ரோடு முதல் பாவடித்தோப்பு வரை சிறிய மழை பெய்தால் வீடுகளுக்குள் மழைநீர் சாக்கடை நீருடன் கலந்து செல்கிறது.
ஜெயகவிதா:-கழிவு நீர் வாருகால்கள் சுத்தம் செய்யும் போது அள்ளப்படும் கழிவுகளை அகற்ற காலதாமதம் ஆகிறது.
முருகானந்தம்:-மத்திய அரசின் திட்டங்களால் நகராட்சி பயனைடந்துள்ளது. நகராட்சி அலுவலகத்தில் பிரதமர் நரேந்திரமோடி படத்தை வைக்க வேண்டும்.
தலைவர்:- உறுப்பினர்களின் கோரிக்கை குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்.
நகராட்சி பூங்கா
அப்துல் ரகுமான்:- புதிய பஸ் நிலையத்திலிருந்து புறவழிச்சாலையை இணைக்கும் இ-3 சாலை திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும்
ராமதிலகவதி:- பட்டாபிராமர் கோவில் தெரு, ஆனந்த ஐயப்பன் கோவில் அருகே பேவர் ப்ளாக் கற்கள் பதிக்க வேண்டும்.
உறுப்பினர் டுவிங்கிளின் ஞானபிரபா:- ெரயில்வே பீடர் சாலையில் கிழக்குப்பகுதியில் உள்ள நகராட்சி பூங்காவை செயல்படுத்த வேண்டும்.
நாகநாதன்:- 3-வது வார்டு நகராட்சி நடுநிலைப்பள்ளியை மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும்.
தலைவர் : உறுப்பினர்களின் கோரிக்கை அனைத்தும் பரிசீலிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு விவாதம் நடைபெற்றது.