அரக்கோணம் நகராட்சியில் கழிவு பொருட்களின் மறுசுழற்சி மையம்

அரக்கோணம் நகராட்சியில் கழிவு பொருட்களின் மறுசுழற்சி மையம் இன்று முதல் செயல்படுகிறது.

Update: 2023-05-19 18:59 GMT

அரக்கோணம் நகராட்சியில் தூய்மை இந்தியா திட்டத்தின்படி நகராட்சிக்கு உட்பட்ட 36 வார்டுகளிலும் வீடுகளில் இருந்து பெறப்படும் குப்பைகளை மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை என தரம் பிரித்து பெறப்பட்டு மக்கும் குப்பைகளை நுண்ணுயிர் மையத்திற்கு கொண்டு சென்று இயற்கை உரமாக செய்யப்பட்டு அதனை பொதுமக்கள் மற்றும் விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மக்காத குப்பைகளை தரம் பிரித்து சிமெண்டு ஆலைகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

தொடர்ந்து பொதுமக்களிடமிருந்து தேவையற்ற பொருட்களை முழுமையாக பெறுவதற்காக 2.0 தூய்மை இந்தியா திட்டம் மூலம் எனது வாழ்க்கை எனது தூய்மையான நகரம் என்ற பெயரில் நகராட்சியின் அனைத்து வார்டிலும் தேவையற்ற பொருட்களை பெறுவதற்காக இன்று (சனிக்கிழமை) முதல் அடுத்த மாதம் (ஜூன்) 5-ந் தேதி வரை கழிவுகளின் உபயோகத்தை குறைத்தல், மறுபயன்பாடு மற்றும் மறுசுழற்சி செய்தல் மையம் செயல்பட உள்ளது.

இது குறித்து நகராட்சி ஆணையர் லதா கூறுகையில் பொதுமக்கள் தங்கள் பயன்படுத்திய தேவையற்ற பொருட்களை இம்மையத்தில் ஒப்படைத்து இத்திட்டத்தின் மூலம் நமது நகரை தூய்மையாக பராமரிக்கவும், நோய்கள் பரவல்கள் ஏற்படாமல் கட்டுப்படுத்தவும் மற்றும் திடக்கழிவுகள் முறையாக அப்புறப்படுத்தியும் நகரை தூய்மையாக வைத்துக் கொள்ள பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்