காட்டு யானையை பிடிக்க வேண்டும்

கூடலூர் அருகே டீக்கடைக்காரர் கொன்ற காட்டு யானையை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து கட்சி கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. இதுதொடர்பாக கலெக்டரை சந்தித்து முறையிட முடிவு செய்யப்பட்டு உள்ளது.

Update: 2022-06-18 14:01 GMT

கூடலூர், 

கூடலூர் அருகே டீக்கடைக்காரர் கொன்ற காட்டு யானையை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து கட்சி கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. இதுதொடர்பாக கலெக்டரை சந்தித்து முறையிட முடிவு செய்யப்பட்டு உள்ளது.

டீக்கடைக்காரர் பலி

கூடலூர் தாலுகா ஓவேலி பேரூராட்சி ஆரோட்டுப்பாறையை சேர்ந்த டீக்கடைக்காரர் ஆனந்தகுமார் என்பவரை கடந்த மாதம் 26-ந் தேதி காட்டு யானை தாக்கி கொன்றது. இதைத்தொடர்ந்து சுற்றுவட்டார கிராம மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். மேலும் காட்டு யானையை பிடிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

இதைத்தொடர்ந்து அதிகாரிகள், வனத்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி காட்டு யானையை பிடிப்பதாக உறுதியளித்தனர். இதன் தொடர்ச்சியாக முதுமலையில் இருந்து 4 கும்கி யானைகள் அழைத்து வரப்பட்டது. தொடர்ந்து காட்டு யானையின் நடமாட்டத்தை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். சில சமயங்களில் ஊருக்குள் நுழைய முயற்சி செய்யும் போது கும்கி யானைகள் மூலம் காட்டு யானையை விரட்டியடித்து வருகின்றனர்.

அனைத்து கட்சி கூட்டம்

இந்தநிலையில் அதிகாரிகள் உறுதி அளித்தபடி காட்டு யானையை இதுவரை பிடிக்கவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். மேலும் மாணவ-மாணவிகள் பள்ளிக்கூடங்களுக்கு சென்று விட்டு பாதுகாப்பாக வருவது கேள்விக்குறியாக உள்ளது என பெற்றோர் கவலை அடைந்து உள்ளனர். இதனால் காட்டு யானையை பிடிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதுதொடர்பாக வனத்துறையினர் தரப்பில் விளக்கம் கேட்டபோது, காட்டு யானையை பிடிப்பது குறித்து உயர் அதிகாரிகளிடம் இருந்து உத்தரவு வரவில்லை என்றனர். இதைத்தொடர்ந்து பேரூராட்சிக்கு உட்பட்ட சூண்டி பகுதியில் பேரூராட்சி துணைத்தலைவர் சகாதேவன் தலைமையில் தி.மு.க. நிர்வாகி செல்வரத்தினம் உள்பட அனைத்து கட்சிக் கூட்டம் நேற்று நடைபெற்றது. அப்போது பொதுமக்களின் உயிருக்கு தொடர்ந்து அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் காட்டு யானையை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இது சம்பந்தமாக மாவட்ட கலெக்டரை நாளை (திங்கட்கிழமை) சந்தித்து முறையிடுவது என முடிவு செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்