முதுமலை சாலையோரம் சுற்றிதிரிந்தபடி வாகனங்களை விரட்டும் சுள்ளி கொம்பன் யானை
முதுமலை சாலையோரம் முகாமிட்டு சுற்றித்திரியும் சுள்ளி கொம்பன் காட்டு யானை, வாகனங்களை விரட்டுகிறது. இதனால் வாகன ஓட்டிகளுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.;
கூடலூர்: முதுமலை சாலையோரம் முகாமிட்டு சுற்றித்திரியும் சுள்ளி கொம்பன் காட்டு யானை, வாகனங்களை விரட்டுகிறது. இதனால் வாகன ஓட்டிகளுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சுள்ளி கொம்பன் யானை
முதுமலை புலிகள் காப்பகத்தில் காட்டு யானைகள், மான்கள், காட்டெருமைகள், புலிகள், கரடிகள், சிறுத்தை புலிகள் உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகிறது. இதில் மான்கள் முதுமலை சாலையோரம் அதிகளவு காணப்படும். புலிகள், கரடிகள், சிறுத்தை புலிகளை மிக அபூர்வமாகவே காண முடியும். தற்போது மான்கள் கூட்டமும் சாலையோரம் காண முடிவதில்லை.
இதனால் முதுமலை வழியாக செல்லும் முக்கிய சாலைகளில் வனவிலங்குகள் நடமாட்டம் இல்லாமல் உள்ளது. ஆனால் கார்குடி பகுதியில் சாலையோரம் சுள்ளி கொம்பன் என்ற காட்டு யானை முகாமிட்டு சுற்றித்திரிந்து வருகிறது. இதை கர்நாடகம் உள்பட வெளிமாநிலங்களில் வரும் வாகன ஓட்டிகள் செல்போன்களில் புகைப்படம் எடுத்து செல்கின்றனர். அப்போது ஆத்திரமடையும் சுள்ளி கொம்பன் யானை வாகனங்களை விரட்டுகிறது.
வனத்துறை எச்சரிக்கை
ஆனால் அதை அறியாமல் வரும் வாகன ஓட்டிகள் காட்டு யானையை கண்டு ஆர்வம் மிகுதியால் புகைப்படம் எடுத்து மகிழ்கின்றனர். இதனால் எதிர்பாராத விதமாக வாகனங்களை தாக்கும் அபாயமும் உள்ளது. இதைத் தொடர்ந்து வாகன ஓட்டிகளுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் முதுமலை சாலையில் வாகனங்களை நிறுத்தக்கூடாது என அறிவுறுத்தி வருகின்றனர்.
இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது:-
கடந்த சில வாரங்களாக மான்கள் கூட்டம் அதிகமாக சாலையோரம் காணப்பட்டது, இதை சீசன் சமயத்தில் சுற்றுலா பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகள் சாலையில் செல்லும்போது கண்டு ரசித்தனர். தற்போது சுள்ளி கொம்பன் காட்டு யானை முகாமிட்டு வாகனங்களை விரட்டுகிறது. அதனிடம் சிக்காமல் இருக்க வாகன ஓட்டிகள் கவனமுடன் செல்ல வேண்டும் என்றனர்.