பெட்ரோல், டீசல் விலையை குறைக்கக்கோரி தலைமைச்செயலகம் நோக்கி நடைபயணம் -அண்ணாமலை பேட்டி

தேர்தல் வாக்குறுதியில் கூறியது போன்று பெட்ரோல், டீசல் விலையை தி.மு.க. அரசு குறைக்கக்கோரி தலைமை செயலகம் நோக்கி நடைபயணம் செல்ல இருப்பதாக தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கூறினார்.;

Update: 2022-05-27 22:01 GMT

சென்னை,

பிரதமர் நரேந்திரமோடி பங்கேற்ற நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சில கோரிக்கைகளை முன்வைத்து பேசிய விதம் சரியானது அல்ல. இந்த விழாவில் சமூகநீதி பற்றியும் மு.க.ஸ்டாலின் பேசி உள்ளார். சமூகநீதிக்கு எதிராக செயல்பட்ட தி.மு.க. அமைச்சர்கள், எம்.பி.க்கள் மீது மு.க.ஸ்டாலின் என்ன நடவடிக்கை எடுத்தார்?.

தமிழகத்துக்கு மத்திய அரசின் வரி வருவாயில் இருந்து 1.21 சதவீதம் மட்டுமே நிதியாக வழங்கப்படுவதாக மு.க.ஸ்டாலின் கூறியிருப்பது தவறானது.

நாடகம்

2021-2022-ம் ஆண்டில் மத்திய அரசுக்கு மொத்தம் 7 கோடியே 40 லட்சம் ரூபாய் வரி வருவாய் கிடைத்தது. இதில் தமிழகத்துக்கு பிரித்து கொடுத்தது 70 ஆயிரத்து 189 கோடி ரூபாய் ஆகும். இதன்மூலம் மத்திய அரசின் வரி வருவாயில் இருந்து தமிழக அரசு பெற்ற நிதி 9.4 சதவீதம் ஆகும்.

2009-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரையிலான 5 ஆண்டு காலத்தில் மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது வரி வருவாய் மூலம் தமிழகத்துக்கு வழங்கப்பட்ட நிதி 62 ஆயிரத்து 615 கோடி ரூபாய் ஆகும். 2014-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை பா.ஜ.க. ஆட்சியில் இருந்த 5 ஆண்டு காலத்தில் வரி வருவாய் மூலம் கிடைத்த நிதியில் 1 லட்சத்து 19 ஆயிரத்து 455 கோடி ரூபாய் தமிழக அரசுக்கு நிதியாக வழங்கப்பட்டுள்ளது. இது, காங்கிரஸ் ஆட்சியின் போது வழங்கப்பட்டதை விட 2½ சதவீதம் அதிகம் ஆகும்.

தமிழக அரசு மத்திய அரசுக்கு தர வேண்டிய தொகை 25 ஆயிரத்து 949 கோடி ரூபாய் தற்போது வரை நிலுவையில் உள்ளது. இதைப்பற்றி தமிழக முதல்-அமைச்சரோ, நிதி அமைச்சரோ பேசுவது இல்லை. மாறாக மத்திய அரசு தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நிதியை தராமல் இழுத்தடிப்பது போன்று ஒரு நாடகத்தை தொடர்ந்து அரங்கேற்றி வருகிறார்கள்.

எது உண்மை?

மத்திய அரசு தமிழகத்துக்கு வழங்க வேண்டிய ஜி.எஸ்.டி. நிலுவைத்தொகை 6,500 கோடி ரூபாய் என சட்டமன்றத்தில் நிதி அமைச்சர் தெரிவித்தார். ஆனால், முதல்-அமைச்சர் 14 ஆயிரம் கோடி நிலுவைத்தொகை வழங்கப்பட வேண்டும் என கூறி உள்ளார். இதில் எது உண்மை என்பது தெரியவில்லை.

தமிழக அமைச்சர்கள் செய்து வரும் ஊழல்களை ஜூன் மாதம் முதல் வாரத்தில் இருந்து வெளியிட உள்ளோம். முதற்கட்டமாக 2 அமைச்சர்கள் சுமார் 100 கோடி முதல் 120 கோடி வரை செய்த ஊழலை ஆதாரங்களுடன் வெளியிட உள்ளோம். அதன் மூலம் அந்த 2 அமைச்சர்களும் பதவி விலகும் சூழல் ஏற்படும்.

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை குறைப்போம் என தி.மு.க. தேர்தல் வாக்குறுதியில் கூறி உள்ளது. ஏன் இதை செய்ய தி.மு.க. முன்வர மறுக்கிறது. தி.மு.க. அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக்கோரி வருகிற 31-ந் தேதி தலைமை செயலகம் நோக்கி நடைபயணம் மேற்கொள்ள உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்