ஸ்ரீரங்கம், திருவானைக்காவல், சமயபுரம் கோவில்களில் நடை அடைப்பு

ஸ்ரீரங்கம், திருவானைக்காவல், சமயபுரம் கோவில்களில் நடை அடைக்கப்படுகிறது.;

Update: 2022-11-06 22:06 GMT

ஸ்ரீரங்கம்:

நடை அடைப்பு

சந்திர கிரகணம் நாளை(செவ்வாய்க்கிழமை) மதியம் 2.39 மணி முதல் மாலை 6.19 மணி வரை நீடிக்கிறது. பொதுவாக கிரகண காலத்தில் கோவில்களில் சன்னதிகளின் நடை அடைக்கப்படும். அதன்படி சந்திர கிரகணத்தையொட்டி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நாளை காலை 6.45 மணி முதல் காலை 8 மணி வரையிலும், காலை 9 மணி முதல் மதியம் 12.30 மணி வரையிலும், இரவு 8 மணி முதல் இரவு 9 மணி வரையும் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர். பகல் 12.30 மணி முதல் இரவு 8 மணி வரை மூலவர் தரிசனத்திற்கு அனுமதி கிடையாது. பிற சன்னதிகளிலும் நடை அடைக்கப்படும்.

சந்திர கிரகண திருமஞ்சனத்தையொட்டி நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து மதியம் 1.30 மணிக்கு புறப்பட்டு சந்தனு மண்டபத்திற்கு மதியம் 2 மணிக்கு வந்து சேர்வார். அங்கு மதியம் 3 மணி முதல் மாலை 6.15 மணி வரை நம்பெருமாள் திருமஞ்சனம் கண்டருளுவார். பின்னர் சந்தனு மண்டபத்தில் இருந்து இரவு 7 மணிக்கு புறப்பட்டு இரவு 7.30 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைவார்.

திருவானைக்காவல், சமயபுரம்...

இதேபோல் திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி கோவிலில் காலை, உச்சிகால பூஜை, பவுர்ணமி பூஜை முடித்து பகல் 1 மணி முதல் மாலை 6.30 மணி வரை நடை அடைக்கப்படுகிறது. பரிகார பூஜைகள் செய்யப்பட்டு பின்னர் நடை திறக்கப்படும். மேலும் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நாளை வழக்கம்போல் காலை 5.30 மணிக்கு நடை திறக்கப்படும். உச்சிக்கால பூஜை நடைபெற்ற பின்னர் மதியம் 12.30 மணிக்கு நடை சாத்தப்படும். பின்னர் இரவு 7.30 மணிக்கு புண்ணியாகவாசனம் செய்யப்பட்டு, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும். அதன் பிறகு நடை திறக்கப்பட்டு பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்ய இரவு 9.30 மணி வரை அனுமதிக்கப்படுவார்கள்.

சமயபுரம் மாரியம்மன் கோவிலின் உப கோவில்களான போஜீஸ்வரர்கோவில், முக்தீஸ்வரர் கோவில், செல்லாண்டியம்மன் கோவில் ஆகிய கோவில்களிலும் நாளை உச்சிகால பூஜை நடைபெற்ற பின்னர் நடை சாத்தப்படும். அதைத் தொடர்ந்து நாளை மறுநாள் (புதன்கிழமை) காலை புண்ணியாகவாசனம் உள்ளிட்டவை நடைபெற்ற பின்னர் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் கோவிலுக்குள் சென்று தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்று சமயபுரம் மாரியம்மன் கோவில் இணை ஆணையர் கல்யாணி தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்