கறம்பக்குடி தாலுகா அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம்
கறம்பக்குடி தாலுகா அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.;
கறம்பக்குடி அருகே உள்ள கரு.தெற்குதெரு ஊராட்சியில் 100 நாள் வேலையை தடையின்றி வழங்க வேண்டும், குடிநீர் பிரச்சினையை தீர்க்க வேண்டும். சாலை வசதிகளை மேம்படுத்த வேண்டும். ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு புதிய கட்டிடம், சமையல் கூடம் கட்டவேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் கறம்பக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு இன்று சாலை மறியல் போராட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி சாலை மறியல் செய்ய முயன்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினரை போலீசார் மற்றும் வருவாய் துறையினர் பேச்சுவார்த்தைக்காக கறம்பக்குடி தாலுகா அலுவலகம் அழைத்து சென்றனர். ஆனால் பேச்சுவார்த்தைக்கு ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் யாரும் வரவில்லை. இதனால் ஆத்திரமடைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் கறம்பக்குடி தாலுகா அலுவலக நுழைவுவாயில் முன்பு அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து மாலையில் கறம்பக்குடி தாசில்தார் ராமசாமி, கறம்பக்குடி வட்டார வளர்ச்சி அலுவலர்கள், கருணாகரன், திலகவதி, ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டது. இதை தொடர்ந்து காத்திருப்பு போராட்டத்தை கைவிட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் கலைந்து சென்றனர்.