கைத்தறி நெசவாளர்கள்- ஜவுளி உற்பத்தியாளர்கள் இடையே கூலி உயர்வு பேச்சுவார்த்தை

Update:2023-10-01 02:44 IST

கும்பகோணம், அக்.1-

கலெக்டரிடம் கோரிக்கை

கும்பகோணம், அரியலூர் ஆகிய பகுதிகளில் சுமார் 10 ஆயிரம் பட்டு கைத்தறி நெசவாளர்களும், 200-க்கும் மேற்பட்ட பட்டு ஜவுளி உற்பத்தியாளர்களும் உள்ளனர்.

இந்த கைத்தறி நெசவாளர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை பேச்சுவார்த்தை நடத்தி, அதன் முடிவில் ஏற்கனவே வழங்கப்பட்ட கூலியை விட சற்று அதிகம் கூலி வழங்கப்படுவதும் உண்டு.

கடந்த 2021-ம் ஆண்டு நடந்த பேச்சுவார்த்தையில், 10 சதவீதம் கூலி வழங்க முடிவு செய்து கூலி வழங்கப்பட்டு வந்தது. இந்த ஆண்டு கடந்த பிப்ரவரி மாதத்துடன் கூலி உடன்படிக்கை முடிந்து விட்டது. ஆனால் கடந்த 6 மாதங்களாக கூலிக்கான பேச்சுவார்த்தை நடத்தப்படாமல் இருந்துவந்தது. இந்த நிலையில், தஞ்சை கலெக்டர் தீபக் ஜேக்கப் மற்றும் அன்பழகன் எம்.எல்.ஏ.விடம் உற்பத்தியாளர்கள் மற்றும் நெசவாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.

பேச்சுவார்த்தை

அதன்படி கும்பகோணம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் பூர்ணிமா தலைமையில் கூலி உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தை நடந்தது. இந்த பேச்சுவார்த்தையில் உற்பத்தியாளர் சங்கம், கைத்தறி தொழிலாளர் சங்கம் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் கடந்த பேச்சுவார்த்தையில் நிர்ணயிக்கப்பட்ட கூலி உயர்வுடன் சின்ன பட்டா ரகத்திற்கு ரூ.120-ம், முந்தி செல் ரகத்திற்கு ரூ, 150-ம், ஜங்களா ரகத்திற்கு ரூ.200-ம் என கூலியை உயர்த்தி வழங்குவது என முடிவு செய்யப்பட்டது.

கூலி உயர்வு

இந்த கூலி உயர்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் வருகிற 2025-ம் ஆண்டு அக்டோபர் 30-ந் தேதி வரை அமலில் இருக்கும் என்று நிர்வாகிகள் தெரிவித்தனர்.

இந்த பேச்சுவார்த்தை கூட்டத்தில் அரசு சார்பில் திருவிடைமருதூர் தாசில்தார் சுசீலா, கும்பகோணம் துணை தாசில்தார் கிருபாராணி, வருவாய் ஆய்வாளர் பகவதி, கிராம நிர்வாக அலுவலர் மூர்த்தி, உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாகிகள், கைத்தறி தொழிற் சங்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்