வ.உ.சி. நற்பணி மன்ற ஆண்டு விழா
திண்டுக்கல்லில் வ.உ.சி. நற்பணி மன்ற ஆண்டு விழா நடந்தது.
திண்டுக்கல் வ.உ.சிதம்பரம் பிள்ளை நற்பணி மன்றத்தின் 39-ம் ஆண்டு விழா திண்டுக்கல்லில் நடந்தது. இதற்கு நற்பணி மன்ற தலைவர் தனபாலன் தலைமை தாங்கினார். துணை செயலாளர் சாய் பிரசாத் வரவேற்றார். செயலாளர் தனராஜ் ஆண்டறிக்கை வாசித்தார். பொருளாளர் மாரிமுத்து வரவு-செலவு கணக்கையும், துணை செயலாளர் தங்கவேல் தீர்மானங்களையும் வாசித்தனர்.
விழாவில் வ.உ.சிதம்பரம் பிள்ளையின் பேரன் வ.உ.சி.வா.சிதம்பரம், திண்டுக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் வி.மருதராஜ், திண்டுக்கல் மாநகர மேயர் இளமதி ஜோதி பிரகாஷ், முன்னாள் எம்.எல்.ஏ. பிரேம்குமார், திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் எஸ்.ஆர்.வீரமணி, அறுவை சிகிச்சை பிரிவு துணை பேராசிரியர் டாக்டர் வி.திருலோகசந்திரன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர்.
விழாவில் 6 மாணவ-மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகையும், எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 வகுப்பு அரசு தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற 8 பேருக்கு வெள்ளி பதக்கம் மற்றும் ரொக்க பரிசும், கணித பாடத்தில் அதிக மதிப்பெண்கள் பெற்ற 8 பேருக்கு வெள்ளிப் பதக்கம் உள்பட 60 மாணவ-மாணவிகளுக்கு ஊக்கப் பரிசுகளை சிறப்பு அழைப்பாளர்கள் வழங்கினர். இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக, வ.உ.சி.யின் 151-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டு, அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டது. விழா முடிவில் மன்ற துணைத் தலைவர் சண்முகம் நன்றி கூறினார்.