உறையூர் வெக்காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

திருச்சி உறையூர் வெக்காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் யாகசாலை பூஜையுடன் நேற்று தொடங்கியது.;

Update: 2022-07-02 19:13 GMT

திருச்சி உறையூர் வெக்காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் யாகசாலை பூஜையுடன் நேற்று தொடங்கியது.

உறையூர் வெக்காளியம்மன் கோவில்

திருச்சி உறையூரில் சக்தி தலங்களில் புகழ்பெற்ற வெக்காளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு கருவறையில் அம்மன் கூரையின்றி மழையில் நனைந்தும், வெயிலில் காய்ந்தும், வெட்ட வெளியில் வீற்றிருந்து மக்களை காத்து வருகிறார்.

இந்தநிலையில் சிறப்பு வாய்ந்த இந்த கோவிலில் புதிதாக கருங்கல் அர்த்தமண்டபம், அர்த்தமண்டப கதவு மற்றும் நிலைக்கு வெள்ளி தகடு போர்த்துதல், அலங்கார மண்டபம், தூண்கள் கலைநயத்துடன் புதுப்பிக்கும் திருப்பணிகள் நடைபெற்று வந்தன. மேலும் அனைத்து மண்டபங்கள், ராஜகோபுரம், விமானங்கள், பழுதுநீக்கி புதுப்பித்தல் உள்பட பல்வேறு திருப்பணிகளும் நடைபெற்று வந்தன.

திருப்பணிகள்

இந்த திருப்பணிகள் அனைத்தும் நிறைவடைந்ததை தொடர்ந்து வருகிற 6-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதையொட்டி நேற்று முன்தினம் காலை 7 மணிக்கு விநாயகர் வழிபாடு, கணபதி ஹோமம், பூர்ணாஹுதி நடைபெற்றது. தொடர்ந்து, காலை 8.30 மணிக்கு வெக்காளியம்மனிடம் அனுமதி பெறப்பட்டது.

காலை 9.30 மணிக்கு வாஸ்து சாந்தி, வாஸ்துஹோமம், மாலை 5.30 மணிக்கு பிரவேசபலி, மிருத்ஸங்கிரஹணம், அங்குரார்ப்பணம் நடத்தப்பட்டு, இரவு 8 மணிக்கு தீபாராதனை காட்டப்பட்டது. நேற்று காலை 7 மணிக்கு அய்யாளம்மன் படித்துறையில் இருந்து திருமஞ்சன தீர்த்தம் கொண்டுவரப்பட்டது.

முதற்கால யாகபூஜை

பின்னர் காலை 8 மணிக்கு நவக்கிரக ஹோமம், மகாலட்சுமி ஹோமம், காலை 9.30 மணிக்கு பூர்ணாஹுதி, தீபாராதனை, யாகசாலை நிர்மானம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து மாலை 5.30 மணிக்கு விநாயகர் வழிபாடு, ரக்‌ஷாபந்தனம் நடத்தப்பட்டு மாலை 6.30 மணிக்கு முதற்கால யாகபூஜை தொடங்கியது.

தொடர்ந்து கும்ப அலங்காரம் செய்யப்பட்டு கலாகர்ஷணமும், யாகசாலை பிரவேசம், யாகமண்டப வேதிகை பூஜை, அக்னிகார்யம் நவாக்னியாகங்கள் நடத்தப்பட்டன. பின்னர் இரவு 8.30 மணிக்கு விஷேசமூலிகை, பழவகை கொண்டுஆஹுதி செய்யப்பட்டு, இரவு 9 மணிக்கு ஸ்ரீவிநாயகர் முதலான யாக பூர்ணாஹுதி செய்யப்பட்டு, ஸ்ரீவெக்காளியம்மன் யாக பூர்ணாஹுதி தீபாராதனை திருவருட்பிரசாதம் வழங்கப்பட்டது.

பூத உருவம்

இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 8.30 மணிக்கு 2-ம் கால யாகபூஜை நடைபெறுகிறது. பின்னர் பல்வேறு பூஜைகள் நடத்தப்பட்டு மாலை 5.30 மணிக்கு இச்சாசக்தி, கிரியாசக்தி, ஞானசக்தி ஆகிய 3 சக்தி வடிவங்களாய் ஒருங்கே அமைந்த அன்னைக்கு 3-ம் கால யாகபூஜை நடைபெறுகிறது.

நாளை (திங்கட்கிழமை) காலை 7.20 மணிக்கு 4-ம் கால யாகபூஜையும், மாலை 6 மணிக்கு நீர், நிலம், நெருப்பு, காற்று, வான்வெளி ஆகிய 5 பூத உருவத்துடன் கூடிய அன்னைக்கு 5-ம் கால யாகபூஜையும் நடைபெறுகிறது. நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) காலை 8.30 மணிக்கு 6-ம் கால யாக பூஜையும், மாலை 6 மணிக்கு 7-ம் கால யாகபூஜை நடைபெறுகிறது.

கும்பாபிஷேகம்

வருகிற 6-ந்தேதி அதிகாலை 4 மணிக்கு 8-ம் கால யாகபூஜை நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து அன்று காலை 6 மணிக்கு மகா பூர்ணாஹுதியும், தீபாராதனை, யாத்ராதானம் நடைபெறுகிறது. பின்னர் காலை 6.20 மணிக்கு யாகசாலையில் இருந்து கடங்கள் புறப்பட்டு கோவிலை வலம் வந்து விமானம், மூலாலயம் சேருதல் நடக்கிறது.

பின்னர் காலை 6.45 மணிக்கு ராஜகோபுரம், விநாயகர் முதலான மூர்த்தி விமானங்கள் கும்பாபிஷேகமும், காலை 6.50 மணிக்கு வெக்காளியம்மன், மூலவ மூர்த்திகளின் கும்பாபிஷேகமும் நடைபெறுகிறது. பின்னர் காலை 10 மணிக்கு மகா அபிஷேகமும், கலசபூஜைகளும், பகல் 12 மணிக்கு மகா தீபாராதனை நடத்தப்பட்டு பிரசாதம் வழங்கப்படுகிறது. அன்று மாலை 7 மணிக்கு வெக்காளியம்மன் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.கும்பாபிஷேக நிகழ்ச்சியில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் பக்தர்கள் திரளாக கலந்து கொள்ள உள்ளனர். கும்பாபிஷேக ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர்கள் ஞானசேகரன், லட்சுமணன் மற்றும் ்கோவில் பணியாளர்கள் செய்து வருகிறார்கள்.

கோவிலில் அம்மன் தரிசனம் கிடையாது

கும்பாபிஷேகத்தையொட்டி அம்பாள் யாகசாலைக்கு எழுந்தருளுவதால் கால பூஜைகள் அனைத்தும் யாகசாலையில் நடைபெறும். எனவே இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் வருகிற 6-ந்தேதி காலை 7 மணி வரை கோவிலில் தரிசனம் கிடையாது. பின்னர் காலை 7.15 மணி முதல் பக்தர்கள் கோவிலில் அம்பாளை தரிசிக்க அனுமதிக்கப்படுவார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்