தி.மு.க.வின் சட்டதிருத்தங்களை வகுத்த குழுவில் இடம் பெற்றவர் வி.பி.ராமன் முதல்-அமைச்சர் புகழாரம்

‘தி.மு.க.வின் சட்டதிருத்தங்களை வகுத்த குழுவில் இடம் பெற்றவர் வி.பி.ராமன்’ என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம் தெரிவித்தார்.

Update: 2022-06-19 22:09 GMT

சென்னை,

மறைந்த பிரபல வக்கீல் வி.பி.ராமனின் வாழ்க்கை வரலாறு அடங்கிய 'மகுடம் மறுத்த மன்னர்' என்ற நூல் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வெளிவந்துள்ளது. இந்த நூல்கள் வெளியீட்டு விழா சென்னை மியூசிக் அகாடமியில் நேற்று நடந்தது. விழாவிற்கு நூலாசிரியரும், வி.பி.ராமனின் மகனுமான பி.எஸ்.ராமன் தலைமை தாங்கினார்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொள்வதாக இருந்தது. ஆனால் உடல்நல குறைவு காரணமாக முதல்-அமைச்சர் கலந்து கொள்ளவில்லை. அவர் சார்பாக அமைச்சர் துரைமுருகன் கலந்து கொண்டு தமிழ் நூலையும், சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் ஆங்கில நூலையும் வெளியிட, அவற்றை கல்பகம் ராமன் பெற்றுக்கொண்டார்.

விழாவில் முதல்-அமைச்சரின் உரையை அமைச்சர் துரைமுருகன் வாசித்தார். அப்போது அவர் பேசியதாவது:-

நம்மை யாரும் பிரிக்க முடியாது

வி.பி.ராமன் குடும்பம் வாழும் இடத்திற்கு லாயிட்ஸ் கார்னர் என்று பெயர். லாயிட்ஸ் பகுதியில் இன்னொரு கார்னரில் வாழும் குடும்பம்தான் எங்கள் கோபாலபுரம் குடும்பம். நீங்கள் ஒரு கார்னர், நாங்கள் ஒரு கார்னர். ஒரே சாலையில் இரு முனைகளை சேர்ந்தவர்கள்தான் நாம்.

அரசியல் ரீதியாக பிளவு ஏற்பட்ட நேரத்திலும், நம்மை யாரும் பிரிக்க முடியாது என்பதன் அடையாளம்தான் வி.பி.ராமனின் வாழ்க்கை வரலாறு நூல் வெளியீட்டு விழாவுக்கு அழைக்கப்பட்டு உள்ளேன். ஒரு வேளை இப்படி ஒரு சுயசரிதை நூலை வி.பி.ராமன் எழுதியிருந்தால் அதனை கருணாநிதி அந்த காலத்திலேயே வெளியிட்டு இருப்பார். அது நடக்காத நிலையில், வி.பி.ராமனின் மகன் பி.எஸ்.ராமன் எழுத கருணாநிதியின் மகனான நான் பங்கு எடுத்து கொள்கிறேன்.

தஞ்சை குடும்பம்

வி.பி.ராமன் குடும்பத்திற்கும், எங்கள் குடும்பத்திற்கும் பல்வேறு ஒற்றுமைகள் உள்ளது. இரண்டு குடும்பமும் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்தவர்கள்தான். சென்னையிலும் அருகிலேயே வாழ்ந்து வருகிறோம். தி.மு.க.வின் சட்டதிருத்தங்களை வகுத்த குழுவில் இடம் பெற்றவர்தான் வி.பி.ராமன். கருணாநிதியின் அன்பு நண்பரான இவர்கள் வீட்டிற்கு அடிக்கடி சென்று கலந்துரையாடி சென்று உள்ளார்.

மகுடம் மறுத்தவராக இருந்தாலும் அவர் வாழ்ந்த காலத்தில் முடிசூடா மன்னனாக இருந்துள்ளார். நீதிமன்றத்தில் கோலோச்சியவர் அவர். எம்.ஜி.ஆர். தன்னுடைய கட்சியில் சேர அவரை அழைத்தபோது அவர் சேரவில்லை. அதற்கான காரணத்தை பி.எஸ்.ராமன் இந்த நூலில் குறிப்பிட்டு இருக்கிறார். வரலாற்றை தனி மனிதர்கள் தீர்மானிக்கிறார்கள் என்றால் அதில் தீர்மானித்த தனிநபரில் வி.பி.ராமனும் ஒருவர். இந்த நிகழ்ச்சியில் நேரில் கலந்து கொள்ளமுடியாமல் போனதற்கு வருத்தம் தெரிவித்து கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

மகுடம் மறுத்தவர்

சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் பேசியதாவது:-

ராமன் என்ற பெயர் இருந்தாலே அவர்கள் மகுடம் மறுத்தவர்களாகதான் இருக்க முடியும். அல்லது மகுடம் மறுக்கப்பட்டவர்களாக இருக்கலாம். ஒரு மனிதன் செய்த சாதனையை அவரது வாழ்க்கை வரலாற்றை படித்து தெரிந்து கொள்வதை விட, எத்தனை பேருடைய வாழ்க்கை வரலாற்றில் அந்த மனிதன் சம்பந்தப்பட்டுள்ளார் என்பதை வைத்துதான் ஒரு மனிதனின் வாழ்க்கையை எடை போட முடியும்.

தமிழ்நாடு வரலாறு எழுதப்படுகிறபோது அதில் வி.பி.ராமனின் பெயர் இருக்கும். இந்த உலகத்தின் வரலாறு என்பது மிகப்பெரிய மனிதனுடைய வாழ்க்கையோடு பின்னி பிணைந்து உள்ளது என்பதற்கு ஏற்ப அவர் வாழ்ந்து மறைந்துள்ளார்.

இவ்வாறு அவர் பேசினார்.

நடிகை சுகாசினி

முன்னதாக வி.பி.ராமனின் மகன் மோகன்ராமன் வரவேற்றார். இந்தியா சிமெண்ட்ஸ் நிர்வாக இயக்குனர் என்.சீனிவாசன். கே.ஆர்.என்.மேனன் உள்பட பலர் பேசினர்.

முன்னாள் மத்திய மந்திரிகள் ப.சிதம்பரம் எம்.பி., தயாநிதிமாறன் எம்.பி. மற்றும் நடிகர்கள் ரஜினிகாந்த், அரவிந்தசாமி, டைரக்டர்கள் மணிரத்தினம், செல்வராகவன், வி.பி.ராமனின் மகன் ரகுராமன் உள்பட ஐகோர்ட்டு நீதிபதிகள், முன்னாள் நீதிபதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியை நடிகை சுகாசினி தொகுத்து வழங்கினார். நூலாசிரியரின் மகள் கீதாஞ்சலி நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்