27,149 பேர் புதிய வாக்காளராக சேர விருப்பம்

Update: 2022-11-30 16:59 GMT


திருப்பூர் மாவட்டத்தில் புதிய வாக்காளராக பெயர் சேர்க்க 27 ஆயிரத்து 149 பேர் விண்ணப்பித்துள்ளனர். அதுபோல் வாக்காளர் பட்டியலில் இருந்து பெயரை நீக்க 10 ஆயிரத்து 477 பேர் விருப்பம் தெரிவித்து இருக்கிறார்கள்.

பெயர் சேர்க்க 27,149 பேர்

திருப்பூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நடத்தப்பட்டது. ஆன்லைன் மூலமும் சேர்க்க வசதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி கடந்த மாதம் 9-ந் தேதி முதல் 27-ந் தேதி வரை மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் நடந்த முகாம்களில் மட்டும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 20 ஆயிரத்து 759 பேர் விண்ணப்பித்துள்ளனர். ஆன்லைன் மூலமாக 6 ஆயிரத்து 390 பேர் பெயர் சேர்க்கைக்கு விண்ணப்பம் செய்துள்ளனர். அதன்படி மொத்தம் மாவட்டத்தில் பெயர் சேர்க்கைக்கு மட்டும் 27 ஆயிரத்து 149 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

அதிகபட்சமாக பல்லடம் தொகுதியில் 5 ஆயிரத்து 600 பேர் பெயர் சேர்க்க விண்ணப்பித்துள்ளனர். அதற்கு அடுத்தபடியாக திருப்பூர் வடக்கு தொகுதியில் 4 ஆயிரத்து 8 பேரும், தாராபுரத்தில் 2 ஆயிரத்து 186 பேரும், காங்கயத்தில் 3 ஆயிரத்து 463 பேரும், அவினாசியில் 3 ஆயிரத்து 559 பேரும், திருப்பூர் தெற்கு தொகுதியில் 3 ஆயிரத்து 130 பேரும், உடுமலையில் 2 ஆயிரத்து 661 பேரும், மடத்துக்குளத்தில் 2 ஆயிரத்து 542 பேரும் விண்ணப்பித்து உள்ளனர்.

10,477 பேர் பெயர் நீக்கம்

மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கம் செய்ய 10 ஆயிரத்து 477 பேரும், திருத்தம், முகவரி மாற்றம் செய்ய 12 ஆயிரத்து 949 பேரும் விண்ணப்பித்து இருக்கிறார்கள். பல்லடம் தொகுதியில் மட்டும் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் உள்ளிட்ட பணிகளுக்கு அதிகபட்சமாக 10 ஆயிரத்து 168 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

ஆன்லைன் மூலமாக பெயர் நீக்கம் செய்ய மொத்தம் 7 ஆயிரத்து 556 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில் அதிகபட்சமாக மடத்துக்குளம் தொகுதியில் மட்டும் 2 ஆயிரத்து 420 பேர் பெயர் நீக்கம் செய்ய விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது. சிறப்பு முகாம் மற்றும் ஆன்லைன் மூலமாக பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் உள்ளிட்ட பணிகளுக்கு இதுவரை மொத்தம் 50 ஆயிரத்து 575 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

மேலும் செய்திகள்