விரைவு தபாலில் 59 ஆயிரம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை

திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் 59 ஆயிரம் பேருக்கு, விரைவு தபாலில் வீடுகளுக்கு வாக்காளர் அடையாள அட்டைகள் அனுப்பி வைக்கப்படுகிறது.;

Update: 2023-04-01 20:45 GMT

மாவட்டம் முழுவதும் 59 ஆயிரம் பேருக்கு, விரைவு தபாலில் வீடுகளுக்கு வாக்காளர் அடையாள அட்டைகள் அனுப்பி வைக்கப்படுகிறது.

வாக்காளர் அடையாள அட்டை

இந்திய தேர்தல் ஆணையம், 18 வயது நிரம்பிய அனைவரையும் வாக்காளர் பட்டியலில் சேர்க்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும் வாக்காளர் பட்டியலில் சேரும் அனைவருக்கும் வண்ண அடையாள அட்டை வழங்கப்படுகிறது. இதனால் கருப்பு வெள்ளை வாக்காளர் அட்டை வைத்திருந்த பலரும் வண்ண அடையாள அட்டையை வாங்கி விட்டனர்.

புதிய வாக்காளர் மட்டுமின்றி முகவரி திருத்தம், தொகுதி இடமாற்றம் செய்வோருக்கும் வண்ண வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது. இந்த வாக்காளர் அடையாள அட்டைகள் ஐதராபாத்தில் அச்சிடப்பட்டு வருகின்றன.

மேலும் முன்பு வாக்குச்சாவடி நிலைய அலுவலர்கள் மூலம் அடையாள அட்டை வழங்கப்பட்டது. இதில் தாமதம் ஏற்படுவதை தவிர்க்க, கடந்த சில ஆண்டுகளாக விரைவு தபாலில் அனுப்பப்படுகிறது.

59 ஆயிரம் பேருக்கு...

இந்த நிலையில் கடந்த 2022-ம் ஆண்டில் இருந்து புதிய வாக்காளர்கள், முகவரி திருத்தம் மற்றும் இடமாற்றம் செய்தவர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படாமல் இருந்தது. இதில் திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டும் 59 ஆயிரம் வாக்காளர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படாமல் உள்ளது. இதனால் அடையாள அட்டை எப்போது கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் வாக்காளர்கள் இருந்தனர்.

இதற்கிடையே கடந்த வாரம் 59 ஆயிரம் பேருக்கும் வாக்காளர் அடையாள அட்டைகள் வந்தன. இதை தொடர்ந்து 59 ஆயிரம் பேருக்கும் விரைவு தபாலில் வாக்காளர் அடையாள அட்டை அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன. இதில் ஒருசிலருக்கு வீட்டில் ஆள் இல்லாமல் வாக்காளர் அடையாள அட்டை திரும்பி வந்து விட்டன. அவ்வாறு திரும்ப வந்துள்ள வாக்காளர் அடையாள அட்டைகள், வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலம் மீண்டும் வழங்கப்படும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்