ஒரே குடும்பத்தினருக்கு வெவ்வேறு வார்டுகளில் ஓட்டு: வாக்காளர் பட்டியலில் உள்ள குளறுபடிகளை சரிசெய்ய வேண்டும்: ஆலோசனை கூட்டத்தில் அரசியல் கட்சியினர் வலியுறுத்தல்

ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு வெவ்வேறு வார்டுகளில் ஓட்டு உள்ளதால் வாக்காளர் பட்டியலில் உள்ள குளறுபடிகளை சரி செய்ய வேண்டும் என்று ஆலோசனை கூட்டத்தில் அரசியல் கட்சியினர் வலியுறுத்தினர்.

Update: 2022-12-01 18:45 GMT

ஆலோசனை கூட்டம்

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தப் பணிகள் குறித்து, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு தேனி மாவட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு பார்வையாளரான அயல்நாடு வாழ் மனிதவள நிறுவன மேலாண்மை இயக்குனர் மகேஸ்வரன் தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் முரளிதரன் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தப் பணிகள் தொடர்பாக அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பல்வேறு கருத்துகளை தெரிவித்தனர். வாக்காளர் பட்டியலில் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களின் பெயர்கள் வெவ்வேறு பாகங்களிலும், அதிக வரிசை எண் இடைவெளியுடனும் இடம் பெற்றுள்ளதால், உள்ளாட்சி தேர்தலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நபர்கள் வெவ்வேறு வார்டுகளில் வாக்களிக்க வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும், இந்த குளறுபடிகளை சரி செய்ய வேண்டும் என்றும் தி.மு.க., அ.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு ஆகிய கட்சிகளை சேர்ந்த பிரதிநிதிகள் வலியுறுத்தினர்.

பெயர் நீக்கம்

இறந்தவர்களின் பெயர்களை நீக்கம் செய்யுமாறு அரசியல் கட்சியினர் மனு கொடுத்தாலும் முழுமையாக நீக்கம் செய்யப்படாமல் உள்ளது. இறந்தவர்கள் பெயரை முழுமையாக பட்டியலில் இருந்து நீக்கம் செய்ய வேண்டும் என்று அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கோரிக்கை வைத்தனர்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சுப்பிரமணியன், பெரியகுளம் ஆர்.டி.ஓ. சிந்து, உத்தமபாளையம் ஆர்.டி.ஓ. பால்பாண்டி, தேர்தல் பிரிவு தாசில்தார் செந்தில்முருகன் மற்றும் அனைத்து தாசில்தார்கள், நகராட்சி ஆணையாளர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

முன்னதாக தேனி, ஊஞ்சாம்பட்டி பகுதிகளில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத்திருத்த முகாம்களில் விண்ணப்பம் கொடுத்தவர்களின் வீடுகளுக்கு, மாவட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு பார்வையாளர் மகேஸ்வரன் நேரில் சென்று விண்ணப்பங்களை சரிபார்க்கும் பணியில் ஈடுபட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்