வ.உ.சி. சிலைக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு மாலை அணிவித்து மரியாதை

நெல்லையில் அரசு சார்பில் வ.உ.சிதம்பரனார் சிலைக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

Update: 2023-09-05 19:00 GMT

நெல்லையில் அரசு சார்பில் வ.உ.சிதம்பரனார் சிலைக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

வ.உ.சி. சிலைக்கு மரியாதை

வ.உ.சிதம்பரனார் பிறந்தநாளையொட்டி நெல்லை மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு அரசு சார்பில் அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

மறக்க முடியாத பெயர்

இந்திய சுதந்திர போராட்ட வீர வரலாற்றில் மறைக்க முடியாத, மறக்க முடியாத ஒரு பெயராக திகழ்ந்தது வ.உ.சி. அவரது 150-வது பிறந்தநாளில் பல்வேறு சிறப்புகளை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தார். நெல்லையில் உள்ள மணிமண்டபத்தை சிறப்புற அழகு செய்ய ரூ.70 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. மேலும் மணிமண்டபத்தை மேம்படுத்திடும் வகையிலும், இளைஞர்களுக்கு உந்து சக்தியாக போட்டி தேர்வுகளுக்கு பயிற்சி பெறும் பகுதியாக மணிமண்டபம் திகழ வேண்டும் என்பதற்காகவும் ரூ.10 லட்சத்தில் குடிநீர், இருக்கைகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு உள்ளன.

எங்களுக்கெல்லாம் ஆசிரியராக இருந்தவர் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி. அவரிடம் பாடம் பெற்ற மாணவர்களாக நாங்கள் அத்தனை பேரும் இங்கு உள்ளோம். அவர் தனக்காக இல்லாமல், பிறருக்காக, தமிழ் சமுதாயத்திற்காக ஆசிரியராக திகழ்ந்தவர். எத்தனையோ பேரை உருவாக்கியவர்கள் ஆசிரியர்கள். ஒவ்வொரு ஆசிரியரை பற்றியும் ஒவ்வொருவருக்கு நல்ல நினைவுகள் பல உண்டு. இந்த தருணத்தில் அனைத்து ஆசிரியர்களுக்கும், ஆசிரியர் தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

கலெக்டர்

நிகழ்ச்சியில், கலெக்டர் கார்த்திகேயன், மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி, தி.மு.க. கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன், மத்திய மாவட்ட பொறுப்பாளர் மைதீன்கான், அப்துல் வகாப் எம்.எல்.ஏ., மேயர் பி.எம்.சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ, நெல்லை உதவி கலெக்டர் ஷேக் அயூப், பாளையங்கோட்டை யூனியன் தலைவர் தங்கபாண்டியன், செய்தி-மக்கள் தொடர்பு அலுவலர் ஜெயஅருள்பதி, மாநகராட்சி செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஆறுமுகசெல்வி, தாசில்தார் வைகுண்டம், முன்னாள் எம்.பி. விஜிலா சத்யானந்த், முன்னாள் எம்.எல்.ஏ. மாலைராஜா, தி.மு.க. மாநகர செயலாளர் சுப்பிரமணியன், மண்டல தலைவர்கள் பிரான்சிஸ், மகேஸ்வரி, கிழக்கு மாவட்ட அவைத்தலைவர் கிரகாம்பெல், இளைஞர் அணி செயலாளர் கருப்பசாமி கோட்டையப்பன், சூப்பர் மார்க்கெட் தலைவர் பல்லிக்கோட்டை செல்லத்துரை, கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கிராம ஊராட்சிகளுக்கு டிராக்டர்கள்

இதைத்தொடர்ந்து நெல்லை மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் வர்த்தக மையத்தில் வைத்து ரூ.94 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பில் கிராம ஊராட்சிகளுக்கு 8 டிராக்டர்கள் மற்றும் 10 மின்கல வண்டிகள், 2 சிறிய டிராக்டர்கள் ஆகியவற்றுக்கான சாவிகளை ஊராட்சி மன்ற தலைவர்களிடம் அமைச்சர் தங்கம் தென்னரசு வழங்கினார்.

இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சுரேஷ், உதவி திட்ட அலுவலர் சந்திரசேகரன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கோவிந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்