வைட்டமின் 'ஏ' திரவம் வழங்கும் பணி

தேனி மாவட்டத்தில் 5 வயதுக்குட்பட்ட 85 ஆயிரம் குழந்தைகளுக்கு வைட்டமின் ‘ஏ' திரவம் வழங்கும் பணியை கலெக்டர் தொடங்கி வைத்தார்.

Update: 2022-12-19 19:00 GMT

வைட்டமின் 'ஏ' திரவம்

5 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இயல்பான வளர்ச்சி மற்றும் உடல் வளர்ச்சி ஆகியவற்றுக்கு தேவையான முக்கிய நுண்ணூட்டச் சத்தாக வைட்டமின் 'ஏ' விளங்குகிறது. இதற்காக தமிழகம் முழுவதும் 6 மாதத்தில் இருந்து 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு வைட்டமின் 'ஏ' திரவம் வழங்கும் பணியை மேற்கொள்ள அரசு உத்தரவிட்டது.

6 மாதம் முதல் 1 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு 1 மி.லி. அளவும், 1 வயது முதல் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு 2 மி.லி. அளவும் இந்த திரவம் வழங்கப்படுகிறது.

1,297 இடங்கள்

தேனி மாவட்டத்தில் 85 ஆயிரத்து 232 குழந்தைகளுக்கு இந்த திரவம் வழங்கப்பட உள்ளது. மாவட்டத்தில் உள்ள 41 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், 191 துணை சுகாதார நிலையங்கள், 1,065 அங்கன்வாடி மையங்கள் என மொத்தம் 1,297 இடங்களில் வைட்டமின் 'ஏ' திரவம் வழங்கும் பணி நேற்று தொடங்கியது. வருகிற 24-ந்தேதி வரை இந்த பணி நடக்கிறது. பொது சுகாதாரத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் ஆகிய துறைகள் சார்ந்த 1,295 பணியாளர்கள் இந்த பணிக்காக நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த பணிகளை பார்வையிட 52 அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த திரவம் வழங்கும் பணியின் தொடக்க நிகழ்ச்சி தேனி சந்தைகேட் அருகில் உள்ள அங்கன்வாடி மையத்தில் நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் முரளிதரன் கலந்துகொண்டு குழந்தைகளுக்கு வைட்டமின் 'ஏ' திரவம் வழங்கும் பணியை தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் டாக்டர் போஸ்கோ ராஜா மற்றும் அரசு துறை அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்